ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டது சந்திரபாபு நாயுடு கண்முன்னே பிரஜா வேதிகா கட்டிடம் தரைமட்டம்: முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி

திருமலை: ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம் சந்திரபாபு நாயுடு கண்முன்னே இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் வாடகை  வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே பிரஜா வேதிகா என்ற கூட்ட அரங்கை ₹8 கோடியில் கட்டினார்.  இங்கு எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களை சந்தித்து பேசி வந்தார்.  மேலும், அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது உட்பட நிகழ்ச்சிகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வந்தார்.  இந்நிலையில் ஆந்திராவில் முதல்வராக பதவி ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டி கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம் இடிக்கப்படும் என தெரிவித்தார்.

அதே கட்டிடத்தில் கடந்த 2 நாட்களாக கலெக்டர், எஸ்பிக்கள் மாநாடு முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நடந்தது. மாநாடு முடிந்த சில மணி நேரத்தில் பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. மக்கள் பணத்தில் ₹8 கோடி செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க தடை விதிக்க வேண்டும் என பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த னிவாச ராவ் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீதா ராம மூர்த்தி, ஷாம் பிரசாத்  தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ராம், சுதாகர் ரெட்டி ஆஜராகி வாதிட்டனர். அப்போது கிருஷ்ணா நதிக்கரையில் 25 அடி வரை வெள்ளம் வரும் நிலையில் 18 அடியில் பிரஜா வேதிகா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் அதிக வெள்ளப்பெருக்கு வந்தால் இந்த கட்டிடம் முழுவதுமாக மூழ்கக் கூடிய நிலை ஏற்படும். ஆனால் இவற்றை கருத்தில் கொள்ளாமல் நதி பாதுகாப்பு சட்டத்தை மீறி அனுமதி பெறாமல் சந்திரபாபு நாயுடு அரசு இந்த கட்டிடத்தை கட்டி இருப்பதாக வாதிட்டனர்.

இதனை ஏற்ற நீதிபதிகள்  மனுதாரரிடம் இந்த கட்டிடம் ஆக்கிரமிப்பு செய்துதான் கட்டப்பட்டுள்ளது என்பதை ஏற்கிறீர்களா  இல்லையா என கேள்வி எழுப்பினர். அதற்கு ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது என மனுதாரர் ஏற்றுக்கொண்டார். பின்னர் எதற்காக இந்த வழக்கு எனக்கூறி பிரஜா வேதிகா கட்டிடம் இடிப்பதை நிறுத்த முடியாது என தெரிவித்தனர். மேலும் இந்த கட்டிடம் மக்கள் பணத்தில் கட்டப்பட்ட நிலையில் தற்போது இடிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய இழப்பை யாரிடம் இருந்து பெறுவது என்பது குறித்து ஜூலை முதல் வாரத்தில் வழக்கு விசாரணை செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. நேற்று மாலை கட்டிடம் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதற்கிடையே, வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினார். தொடர்ந்து தனது இல்லத்திற்கு காரில் சென்ற அவர் இரவிலும் பிரஜா வேதிகா கட்டிடம் இடிக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரில் இருந்து இறங்கி சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அங்கிருந்து சோகத்துடன் புறப்பட்டு சென்றார்.

முன்னாள் முதல்வர்  வீடும் இடிக்கப்படுகிறது

மங்களகிரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆலராமகிருஷ்ணா கூறியதாவது: ‘பிரஜா வேதிகா கட்டிடம் அருகே உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீடும் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதால், அதையும் அகற்ற வேண்டியுள்ளது என்றார். இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தனது வீட்டையும் அரசு இடிக்க உள்ளதால் வீட்டை இடிப்பதற்கு முன்பே அங்கிருந்து செல்வதா அல்லது வீட்டை இடிக்க வரும்போது செல்வதா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: