கடன் மோசடி செய்தவர்களின் சொத்து விவரம் சமர்ப்பிக்க வேண்டும்: வருமான வரித்துறைக்கு வரிகள் வாரியம் உத்தரவு

புதுடெல்லி: கடன் மோசடி செய்தவர்களின் சொத்து மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் பல, பெரிய அளவில் கொடுத்த கடன்களை வாங்க முடியாமல் திணறி வருகின்றன. -இந்த நிலையில், வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) உத்தரவிட்டுள்ளது.  வருமான வரித்துறைக்கு இந்த வாரியம் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:  பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு வங்கிகள் கொடுத்த கடன்கள் பல வசூல் ஆகாமல் உள்ளன. இதையடுத்து கடன் மோசடி செய்தவர்களின் சொத்து விவரங்களை கேட்டுள்ளன. இவற்றின் மூலம் கொடுத்த கடன்களை வசூல் செய்ய திட்டமிட்டுள்ளன.  எனவே, கடன் மோசடி செய்தவர்களின் சொத்து விவரங்களை, பொது நலன் கருதி பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. சொத்து விவரங்கள் தவிர, தேவைப்பட்டால், கடன் மோசடி நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 இதுபோல், கடன் மோசடி நிறுவனங்கள் வேறு எந்த நிறுவனங்களுக்கு சிறிய அளவில் கடன் கொடுத்திருக்கின்றனவா, அல்லது கடனுக்கு பொருட்கள் அல்லது சேவைகள் அளித்துள்ளனவா என்பது பற்றிய விவரங்களையும் தர வேண்டும்.  வருமான வரி கணக்கு தாக்கலின்படி, ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள  தனிநபர் மற்றும் இந்து கூட்டுக்குடும்பத்தினர் விவரங்கள் வருமான வரித்துறையில் இருக்கும். இவற்றில் கடன் வாங்கியவர், அடமானதாரர் மற்றும் ஜாமீன்தாரர் விவரங்களை மட்டும் வருமான வரித்துறை வங்கிகளுக்கு அளிக்கலாம்.  கடன் வசூல் செய்ய வேண்டிய நோக்கத்துக்காக மட்டுமே இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த தகவல்களின் ரகசியம் காக்க வேண்டும். வேறு ஏஜென்சி அல்லது அமைப்புக்கு தகவல்களை பகிரக்கூடாது. இதற்கான ஆவணத்தில் வங்கி மேலாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள்தான் கையெழுத்திட வேண்டும்.   அதோடு, கடன் மோசடி செய்தவர் வைத்துள்ள வரி நிலுவைகளையும் மனதில் கொண்டு, சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: