தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் சிபிஐ விசாரணையில் மெத்தனம் ஏன்?: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி கேள்வி

சென்னை: தூத்துக்குடி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியதாவது:   தூத்துக்குடியில்  போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு  நடத்தியதில் அந்த இடத்திலேயே 13 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 16 பேர் கொல்லப்பட்ட இந்த விவகாரத்தின் மீதான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று 2018 ஆகஸ்ட்  14ம் தேதி  உத்தரவிட்டது. மேலும் விசாரணையை நான்கு மாதங்களுக்குள் முடிக்குமாறும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் சிபிஐ ஒரே ஒரு  போலீஸ் அதிகாரியின் பெயரைக் கூட எப்ஐஆரில் சேர்க்கவில்லை.  சிபிஐ விசாரணையின் நிலை இப்படி இருந்தால், தூத்துக்குடி மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்? தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மாநில அரசு அமைத்த ஆணையத்தின்  அறிக்கையை காரணமாக சொல்லி, மனித உரிமை ஆணையம் தனது ஆய்வை முடித்துக் கொண்டதோடு அறிக்கையையும் பொதுவெளியில் வைக்கவில்லை.

துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை போதுமான அளவு இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கூட மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வேலை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் சரியாக நிறைவேற்றப்படவில்லை.  துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளையோர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  17 வயதே ஆன சுனோலின் என்ற இளம் பெண் தலையில் குறிபார்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: