கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்  என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை கட்டாயப்பாடமாக்க மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அம்பலமாகியுள்ளன. மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகங்களின் துணையுடன் உயர்கல்வியில்  இந்தியை திணிக்க பல்கலைக்கழக மானியக்குழுவும், மத்திய அரசும் முயல்வது கண்டிக்கத்தக்கது.இந்தியா என்பது நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் நாடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் மட்டும் 22 மொழிகள் உள்ளன. இந்தி பேசாத மாநிலங்கள் மீது, குறிப்பாக தமிழகத்தின் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக கடந்த காலங்களில் ஏராளமான மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தி நாட்டின் அலுவல் மொழிதானே தவிர தேசிய மொழி அல்ல. அத்துடன் ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக ஒரு மொழியை அனைத்து மாநிலங்கள் மீதும் திணித்துவிட முடியாது.

பாமகவை பொறுத்தவரை எந்த மொழிக்கும் எதிரி அல்ல. மாணவர்கள் விரும்பினால் இந்தி மட்டுமல்ல, தமிழ் மொழியின் குழந்தைகளான கன்னடம், களி தெலுங்கு, கவின் மலையாளம், துளு உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், எந்த மொழியும் தமிழக மக்கள் மீது திணிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற பரிந்துரையை, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நேற்றே நிராகரித்து விட்டது. அதை பின்பற்றி தமிழக அரசு பல்கலைக்கழகங்களும் இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு ஆதரவாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே இந்தியை கட்டாயமாக்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு திரும்பப்பெற வேண்டும்.

Related Stories: