மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்: வைகோ கண்டனம்

சென்னை: காவிரி பகுதியில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்படுத்த துடிக்கின்ற மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் வருங்கால தலைமுறையின் வாழ்வு வினாக்குறி ஆகிவிடும் பேராபத்து சூழ்ந்து வருவதால், தமிழகம் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.கடந்த 2018 அக்டோபர் மாதம் காவிரிப் படுகையில் சுமார் 6000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்ற வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இந்திய அரசின் பெட்ரோலியத்துறை ஒப்பந்தம் போட்டது. இத்திட்டங்களுக்காக வேதாந்தா நிறுவனம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கின்றன.காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மேற்கண்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி அளித்திருக்கிறது. வேதாந்தா நிறுவனம் இதற்கான அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 27 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஆய்வு செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சையில் 17 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகள், கடலூரில் 7 கிணறுகள், ராமநாதபுரத்தில் 3 கிணறுகள் என்று மேலும் 104 கிணறுகள் அமைக்கவும், இதற்காக ஒரு கிணற்றுக்கு ₹15 கோடி வீதம் மொத்தம் ₹1560 கோடி திட்டச் செலவு ஆகும் என்றும், ஓ.என்.ஜி.சி. சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முற்றாக கைவிடக் கோரியும் மரக்காணம் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம்-ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கியே தீருவோம் என்று மோடி அரசு வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணைபோவதும் கடும் கண்டனத்திற்கு உரியது.பா.ஜ. அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையே சூறையாடி விடும். எனவே, மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: