ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் வருமா?

*  3.5 கிமீக்கு இனிதான் ராட்சத குழாய் பதிக்க வேண்டும்

*  எந்த ஏற்பாடும் செய்யாமல் அறிவித்த தமிழக அரசு
Advertising
Advertising

ஜோலார்பேட்டை: எந்த ஏற்பாடும் செய்யாமல் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் ஜோலார்பேட்டையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, 3.5 கிமீ தூரத்துக்கு ராட்சத குழாய் பதித்தால்தான் ரயிலில் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னைக்கு ரயிலில் குடிநீர் வருவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  சென்னையில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக் ரயிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசு கடந்த வாரம் ₹65 கோடி நிதி ஒதுக்கியது. எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. ஜோலார்பேட்டைக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் வரும் தண்ணீரை ரயிலில் ஏற்றி அனுப்புவதுதான் திட்டம். ஆனால், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அதற்கு எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. அதேபோல் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை எப்படி ரயில் நிலையத்துக்கு கொண்டு வருவது என்பது பற்றியும் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே உதவிக்கோட்ட பொறியாளர் ரமேஷ் சர்மா, சீனியர் செக்‌ஷன் இன்ஜினியர் சுரேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வரை சுமார் 3.5 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய்கள் அமைத்து அதிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தினர். இது குறித்து திருப்பத்தூர் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், ‘ஜோலார்பேட்டை நகராட்சிக்கு தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் தேவை அதிகரிப்பின் காரணமாக 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஏனென்றால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ராட்சத குழாய் வழியாக காவிரி கூட்டு குடிநீர் மேட்டுச்சக்கர குப்பம் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் விடப்பட்டு, அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது’ என்றார். 3.5 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய் பதித்தால்தான் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ரயிலில் தண்ணீரை நிரப்ப முடியும். அந்த பணிகள் எப்போது துவங்கும் என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், சென்னைக்கு ரயிலில் குடிநீர் உடனடியாக வருவது சந்தேகமே என்று தெரிகிறது.

Related Stories: