காவலர் குடியிருப்புகளில் விதிமீறி குடியிருப்போரை வௌியேற்றுங்கள்: டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காவலர் குடியிருப்பில் விதிகளை மீறி குடியிருப்போரை வெளியேற்ற  டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தேவராஜன், மதுரையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காவலர் குடியிருப்பை காலி செய்யாததற்காக அபராதமாக ₹2 லட்சத்து 22 ஆயிரத்து 740ஐ சம்பளத்தில் 15 தவணைகளில் பிடித்தம் செய்ய  2014ல் உத்தரவிடப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி தேவராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில், ‘மனுதாரர் ராமநாதபுரத்தில் பணியாற்றிய காலத்தில் வீட்டு வாடகைப்படியாக ₹560 பெற்றுள்ளார். அதேநரம் மதுரையில் உள்ள குடியிருப்பை காலி செய்யவில்லை. இதை கணக்கிட்டே அபராத வாடகை வசூலிக்க உத்தரவிடப்பட்டது’ என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், இடமாறுதல் செய்யப்பட்டாலோ, ஓய்வு பெற்றாலோ, பணி நீக்கம் செய்யப்பட்டாலோ உடனடியாக ஒதுக்கீடு பெற்ற வீட்டை காலி செய்ய வேண்டும். இவர்களால் குடியிருப்பில் தொடர்ந்து இருக்க முடியாது. ஆனால், மனுதாரர் விதிகளை மீறி அதே வீட்டில் குடியிருக்கிறார். காவல்துறையில் ஒழுக்கம் என்பது இதயம் போன்றது. எனவே, அவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதில் சமரசம் செய்யக்கூடாது. ஒழுக்கம் தவறினால், அது பொதுநலனை பாதிக்கும்.பல்வேறு போலீஸ் அதிகாரிகள் உரிய தகுதியின்றி, சட்டவிரோதமாக தொடர்ந்து காவலர்  குடியிருப்புகளில் ஆக்கிரமித்துள்ளனர். காலி செய்ய மறுக்கின்றனர் என அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் கொண்ட குழுவை டிஜிபி அமைக்க வேண்டும். அக்குழு ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தி போதுமான விபரங்களை சேகரிக்க வேண்டும். தொடர்ந்து சட்ட விரோதமாகவும், முறைகேடாகவும் காவலர் குடியிருப்புகளை ஆக்கிரமித்து உள்ளவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை, சரியான மற்றும் தகுதியானவர்களுக்கு குடியிருப்புகள் கிடைக்கும் வகையில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.  இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>