×

ஆரல்வாய்மொழி அருகே இன்று அதிகாலை துணிகரம்: பெண்ணை தாக்கி 9 பவுன் செயின் பறிப்பு

நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே இன்று அதிகாலை டீக்கடையில் இருந்த பெண்ணை தாக்கி 9 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (60). இவரது மனைவி புஷ்பம் (55). இவர்கள் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்கள். ராஜலிங்கத்துக்கு தற்போது உடல் நிலை சரியில்லாததால், புஷ்பம் தான் டீக்கடையை முழுமையாக கவனித்து வருகிறார். வழக்கம் போல் இன்று அதிகாலை 4.30க்கு டீக்கடையை திறந்தார். கடையில் ராஜலிங்கமும் இருந்தார்.

மேலும் இவர்களின் உறவினர் ஒருவரும் கடைக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். அதிகாலை 4.45 மணியளவில் அந்த வழியாக வாலிபர் ஒருவர் பைக்கில் சென்றார். சிறிது தூரம் சென்றதும், பைக்கை நிறுத்தி விட்டு டீக்கடைக்கு வந்த வாலிபர், சிகரெட் கேட்டார். புஷ்பம் சிகரெட்டுகளை எடுத்து கொடுத்ததும் அதற்கான பணத்தை கொடுத்த வாலிபர், தீப்பெட்டி தருமாறு கூறினார். புஷ்பம் தீப்பெட்டியை தேடிக் கொண்டு இருக்கும் போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த செயின்களை பிடித்து அந்த வாலிபர் இழுத்தார். அவர் இழுத்த வேகத்தில் தடுமாறி புஷ்பம் டேபிளில் விழுந்தார். அந்த சமயத்தில் அவரது கழுத்தில் கிடந்த செயின்களை அறுத்து விட்டு அந்த வாலிபர் ஓடினார். புஷ்பமும் திருடன், திருடன் என கூச்சலிட்டவாறு ஓடினார். கடைக்குள் நின்று கொண்டு இருந்த ராஜலிங்கம் மற்றும் அவரது உறவினரும் துரத்தினர். அந்த வாலிபர் பைக்கை எடுக்கும்போது மூவரும் பிடிக்க முயன்றனர்.

அப்போது ராஜலிங்கத்தை கீழே தள்ளி சரமாரியாக தாக்கி விட்டு வாலிபர் பைக்கை எடுக்காமல் தப்பி ஓடினார். அவரை புஷ்பம் துரத்தினார். சிறிது நேரத்தில் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வாலிபர் மாயமாகி விட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். அந்த பகுதி முழுவதும் அந்த வாலிபரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்னர் இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எந்த பயனும் இல்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தனர். அப்போது புஷ்பத்தின் டீக்கடை அருகே பைக்கை நிறுத்தி விட்டு வாலிபர் நடந்து செல்லும் காட்சிகள், பின்னர் திரும்பி வந்து பைக்கை எடுத்து விட்டு தப்பி ஓட முயலும் காட்சிகள் பதிவாகி உள்ளன.  ஆனால் அவர் நினைத்த படி பைக் ஸ்டார்ட் ஆகாததால், வாலிபர் பைக்கை நிறுத்தி விட்டு தப்பி ஓடும் காட்சிகளும் உள்ளன. வாலிபருக்கு 30ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும். தலையில் தலைப்பாகை கட்டி உள்ளார். இதனால் முகம் சரியாக தெரிய வில்லை. வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். புஷ்பத்திடம் இருந்து சுமார் 9 பவுன் செயின் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கியில் இருந்து மீட்ட மறுநாளே பறி போனது

புஷ்பம் கழுத்தில் மொத்தம் 3 செயின்கள் அணிந்துள்ளார். இதில் ஒரு செயினை வங்கியில் அடகு வைத்து இருந்தார். நேற்று மதியத்துக்கு மேல் அந்த நகையை திருப்பி வந்துள்ளார். வங்கியில் இருந்து திருப்பி வந்த மறுநாளே செயின் பறிக்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புஷ்பம் கூறுகையில், வழக்கமாக காலை 4.30க்கு கடை திறந்து விடுவேன். இன்றும் கடையை திறந்து இருந்த போது, வாலிபர் வந்து சிகரெட் கேட்டார். முதலில் கடையை நோட்டமிட்டவாறு  பைக்கில் சென்று விட்டு பின்னர் திரும்பி கடைக்கு வந்தார். சிகரெட் வாங்கியவர் அதற்கான பணத்தை தந்தார். பின்னர் தீப்பெட்டி கேட்டதால் நான் தீப்பெட்டியை தேடி கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் செயின்களை பிடித்து இழுத்தார். அதிர்ச்சி அடைந்து நான் செயினை விடாமல் பிடித்தேன். அப்போது ஆத்திரத்தில் அந்த வாலிபர் என்னை கீழே தள்ளி செயின்களை பறித்து விட்டு தப்பினார். நானும், எனது கணவர் மற்றும் மைத்துனரும் துரத்தினோம். ஆனால் அந்த வாலிபர் தப்பி விட்டார். உள்ளூரில் தான் ஒழிந்து இருப்பார். என்னால் அவரை அடையாளம் காட்ட முடியும் என்றார்.

பைக், செல்போன் சிக்கியது

செயின் பறிப்பு கொள்ளையன் தப்பி ஓடும் போது அவரது செல்போன் தவறி விழுந்தது. அந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் கொள்ளையன் வந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அது திருட்டு பைக்காக இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். அதில் உள்ள நம்பர் பிளேட் போலி என கூறப்படுகிறது. இது பற்றி தற்போது தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. இதை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags : Oral language, St. Flush
× RELATED அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர்...