×

களக்காடு அருகே பரபரப்பு: விதிகளை மீறி மணல் அள்ளியதால் குளத்தில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம்

களக்காடு: களக்காடு அருகே குளத்தில் விதிமுறைகளை மீறி 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டி மணல் அள்ளப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டன. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் பூலாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர். தற்போது தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வருவதால் பூலாங்குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. வறட்சியின் காரணமாக விவசாய பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் பூலாங்குளத்தில் விவசாய தேவைகளுக்காக மணல் அள்ளிக் கொள்ள வருவாய்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனை பயன்படுத்தி சிலர் கடந்த ஒரு வாரமாக குளத்தில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விதிமுறைகளை மீறி அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குளத்தில் இயந்திரங்கள் மூலம் 20 அடி ஆழம் வரை குழி தோண்டி மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த கீழவடகரை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று இரவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன் தலைமையில் கிராம மக்கள் குளத்தில் திரண்டு மணல் அள்ளும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி உள்ளிட்ட இயந்திரங்களையும் முற்றுகையிட்டு மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய்துறையினருக்கும், களக்காடு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், நாங்குநேரி தாலுகா செயலாளர் முருகன், இந்திய கம்யூ ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம் மற்றும் அரசியல் கட்சியினரும் குளத்தில் மணல் அள்ளப்பட்டதை பார்வையிட்டனர். அவர்கள் கூறுகையில், ‘அதிகாரிகள் துணையுடன் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளது. 20 அடி ஆழத்திற்கு கிணறு போல் குழி தோண்டியுள்ளனர். தினசரி 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மணல் கடத்தி உள்ளனர். இதையெல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் பாராமுகமாக இருந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவோம்” என்றனர்.

Tags : Field, sand, crater
× RELATED திருப்பூரில் சாலையோர தள்ளுவண்டி...