×

சேத்தியாத்தோப்பு அருகே பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகும் மண்புழு உரக்கூடம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரக்கூடம், பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகி வருகிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மிராளூர் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு, மண்புழு உரம் தயாரிப்பதற்காக கடந்தாண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் கீற்று கொட்டகையில் மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டது. இதுவரை உரம் தயாரிக்கும் கொட்டகை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பாழாகிறது.

இதுபோல் கிராம சேவை கட்டிட கட்டுமான பணி, அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணி ஆகியவையும் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிராமத்தில் தெருவிளக்குகளை உரிய முறையில் பராமரிக்காத காரணத்தால் எரிவதில்லை. மேலும், நூறு நாள் வேலை திட்டங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மிராளூர் கிராமத்தில் இரண்டு ஆண்டிற்கும் மேலாக கட்டி முடிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடம், கிராம சேவை கட்டிடம் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் நேரிடையாக ஆய்வு செய்ய வேண்டும், மண் புழு உரம் தயாரிப்பு திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cheyyathope, earthworm fertilizer
× RELATED பொது இடங்களில் நிலவேம்பு கசாயம்: முஸ்லிம் லீக் கோரிக்கை