×

அதிகாரிகளே கட்டாயப்படுத்துவதாக புகார்: குமரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல்

நாகர்கோவில்: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அதிகாரிகள் நிர்ப்பந்தம் ெசய்து வருவதாக ஊழியர்கள் குமுறி வருகின்றனர். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டருக்கு ரூ.5, ஆப் பாட்டிலுக்கு ரூ.10, புல் பாட்டிலுக்கு ரூ.20, பீர் பாட்டிலுக்கு ரூ.10ம் கூடுதலாக வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது. குடிமகன்கள் யாராவது வாக்குவாதம் செய்தால் சில கடைகளில் கூடுதல் பணம் வாங்குவதில்லை. ஆனால் சில கடைகளில் கொடுத்த மதுபாட்டிலை திரும்ப வாங்கிவிட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி திருப்பி அனுப்புகின்றனர். இது தவிர சில்லறை இல்லை. சரியான பணத்தை கொடுங்கள் என்று கராராக கூறுகின்றனர். மது பிரியர்கள் கேட்கும் வகையையும் தருவதில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இதுபற்றி டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை இருந்து வந்தது. தற்போது நிலைமை மாறி இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுப்பது இல்லை. இதற்கு காரணம் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர் அலுவலகங்களுக்கு மாதம்தோறும் ஒவ்வொரு கடையில் இருந்தும் மாமூல் செல்வதாக கூறப்படுகிறது. ஆகவே அவர்கள் இதுபோன்ற புகார்களை கண்டுகொள்வதில்லை என்ற புகார் உள்ளது. மாறாக சில அதிகாரிகள் கூடுதல் விலைக்கு மது விற்று தங்களுக்கு வரவேண்டிய மாமூல் தொகையை உயர்த்தி கேட்டு பெற்று வருகின்றனர்.  இதற்கு புரோக்கர்களாக டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் செயல்படுகின்றனர். இந்த ஊழியர்கள் நினைப்பதே டாஸ்மாக் நிர்வாகத்தில் நடக்கிறது. தமிழக அரசு கூடுதல் பணம் வாங்குவதை தடுக்கும் வகையில், மதுபானங்களின் விலையை உயர்த்தி ரவுண்டாக்கியது. எனினும் பணம் வாங்குவது குறைந்தபாடில்லை. இேபோல் மாவட்ட மேலாளர்கள் வேறு மாவட்டங்களில் சோதனை நடத்தவும் உத்தரவிட்டது.

இதிலும் சோதனைக்கு செல்லும் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்ததும், ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வசூலித்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரி டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்திய மதுரை அதிகாரி 2 நாட்களில் ரூ.70 லட்சம் வரை வசூல் செய்து சென்றார். அப்போது பணம் தராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதுபற்றி செய்திகள் வெளியாகியும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தற்போது குமரி டாஸ்மாக் அதிகாரியின் பெயரை கூறி பல கடைகளில் வசூல் வேட்டையில் திளைத்து வருகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கேரளா போன்று கணினி பில் வழங்கி மது வகைகளை வேறு இடத்தில் வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரியை சேர்ந்த குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளை போனதால்
கூடுதல் பணம்

ஈத்தங்காடு-குலசேகரபுரம் செல்லும் சாலையில், வயலுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு 2 முறை கொள்ளை நடந்துள்ளது. தற்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பெயரை கூறியும், கொள்ளை சம்பவத்தை சுட்டிக் காட்டியும் கூடுதல் பணம் வசூலித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது வாங்க சென்ற ஒருவர் கூடுதல் பணம் தர மறுத்தார். அப்போது எங்கள் கடையில் 2 முறை கொள்ளை போயுள்ளது. அந்த நஷ்டத்தை எப்படி நாங்கள் ஈடுகட்டுவது? மாவட்ட மேலாளர் முதல் மண்டல மேலாளர் வரை பணம் தர வேண்டியுள்ளது. ஏற்கனவே நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, லட்சக்கணக்கில் கொடுத்து மீண்டும் பணிக்கு வந்துள்ளோம். இதுபற்றி நீங்கள் மாவட்ட மேலாளரிடம் புகார் செய்தாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது. வேண்டுமானால் எங்கள் பெயரைக் கூறி புகார் செய்யுங்கள் என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல மாவட்ட மேலாளருக்கு போனில் தகவல் தெரிவித்தும், மேலாளர் ஊழியர்களிடம் பேசிய பின்னரும் எந்தவித பலனுமில்லை. கொள்ளை போனதை காரணம் காட்டி கடை மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் மது பிரியர்களிடம் ஆட்டய போடுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Officers, Bukhara, Kumari, Tasmaq
× RELATED பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம்