×

வங்க கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: நாகை, திருவாரூர், புதுகை, பெரம்பலூரில் மழை

திருச்சி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் குஜராத் வரை அரபிக்கடல் பகுதியிலும், அந்தமான் முதல் மேற்கு வங்கம் வரை வங்கக்கடல் பகுதியிலும், தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டும், மலை பகுதிகளில் பருவ மழை பெய்கிறது. மற்ற இடங்களில் லேசான தூரலும், வெயிலும் நிலவுகிறது.

நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், இன்று லேசானது முதல், மிதமானது வரையில் மழை பெய்யும். வங்க கடல் பகுதியில் வரும் 30ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாகையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. லேசாக பெய்த மழை சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.  சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இம்மழை 30 நிமிடங்கள் வரை பெய்தது. பின்னர் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. கீழ்வேளூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கீழ்வேளூர் மற்றும் அதை சுற்றிய பகுதியில் 20 நிமிடம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. ஆனால் கீழ்வேளூர் பகுதியில் பெய்த மழை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் மழை இல்லை. இன்று அப்பகுதியில் மழை அறிகுறியுடன் மேகமூட்டமாக காணப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமாலை 6  மணி அளவில்  சாரல் மழை பெய்தது. நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு மழை பெய்தது. அன்னவாசல், சித்தன்னவாசல், சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.  அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நாகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், கறம்பக்குடி பகுதிகளிலும் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. பெரம்பலூர் நகர் பகுதியில் நேற்றுமாலை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை நீடித்தது. மக்கள் நனைந்தபடி வாகனங்களில் சென்றனர். இந்ந மழையால்  பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Bengal Sea, Storm Symbol, Nagai, Thiruvarur, Pudukkai, Perambalur, Rain
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...