மக்கள் தடையில்லா மின்சாரம் பெறவேண்டி திட்டம்: மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் புகழூர் முதல் அரசூர் வரை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்ப்பை மீறி விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்கும் பணியை பவர் கிரீட் நிறுவனம் நடத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, செம்மாண்டம் பாளையம், வாய்க்காபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 11-ந் தேதி பவர் கிரீட் நிறுவன அதிகாரிகள் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு நில அளவீடு செய்ய வந்தனர். அவர்களை செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தினார்கள். மேலும் ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே, விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரி, பழனிசாமி உள்ளிட்ட 11 விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், வழக்கு குறித்து பிரமாணப் பத்திரத்தை எம்.பி. கணேசமூர்த்தி தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், 345 கி.மீட்டர் மட்டுமே மின்கோபுரங்கள் அமைக்கும் நிலையில், மனுக்களை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும், அரசு திட்டங்களை முடக்குபவர்கள் மக்கள் பிரச்சனையை வெளிக்கொண்டு வருகிறோமா என பார்க்க வேண்டும், வீடுகள், தொழில் நிறுவனங்களில் தடையில்லா மின்சார வசதியை பெற்றுவிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது. தமிழகத்தில் 345 கிலோ மீட்டருக்கு மட்டுமே மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க தடையில்லை என்றும் தமிழக மக்கள் தடையில்லா மின்சாரம் பெற ஏதுவாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார். சட்டீஸ்கரிலிருந்து தமிழகத்துக்கு 1,843 கி.மீ. தொலைவில் 5,530 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் பெறுவதற்கான இந்த திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்டது மின் கதிர்களை பாய்ந்து பாதிப்புக்கு ஆளானவர்கள் கோபுர உயரத்தை உயர்த்த கோரிக்கை மனு அளிக்கலாம் எனக்கூறி 11 விவசாயிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: