×

நெல்லை மருத்துவகல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் 250 ஆக உயர்வு: ரூ20 கோடியில் புதிய விரிவுரைகூடம் தேர்வறை, நூலகம் கட்டும் பணி தீவிரம்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் 250ஆக உயர்த்தப்பட்டதையடுத்து கூடுதல் தேர்வுக்கூடம், விரைவுரைகூடம், நூலகம் கட்டும் பணி ரூ.20 கோடியில் மும்முரமாக நடக்கிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 54 ஆண்டுகளை கடந்த பாரம்பரியம் மிக்கது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும், 2500க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு (மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகள்) உயர்கல்விக்கு 135 இடங்கள் உள்ளன. 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் கல்விக்கு 100 இடங்களும், பல்வேறு பாரா மெடிக்கல் கல்விக்கு 150 இடங்களும் உள்ளன. தற்போது நோய் குறியியல் துறை (பிஎச்டி)ஆராய்ச்சி படிப்பிற்கு அனுமதி கிடைத்துள்ளது.

எம்பிபிஎஸ் பயில இதுவரை 150 இருக்கைகளே அனுமதிக்கப்பட்டு வந்தன. அதிலும் 15 சதவீதம் மத்திய ஒதுக்கீடாக உள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் நோயாளிகள் வருகை எண்ணிக்கை, மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கையை 150ல் இருந்து 250 ஆக உயர்த்தவேண்டும் என நீண்ட காலமாக ெதன்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் கடந்த சில ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மத்திய மருத்துவக் கவுன்சில் குழு வந்து ஆய்வு செய்து சென்றாலும் சீட் உயர்வு அறிவிப்பு எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் மத்திய கவுன்சில் குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. இதனையடுத்து நடப்பு கல்வியாண்டில் 250 சீட் சேர்க்கைக்கு மத்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்து 5 ஆண்டுகளில் இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். ஆண்டுக்கு 250 மாணவர்கள் வீதம் 5 ஆண்டுக்கு ஆயிரத்து 250 பேர் படிக்கும் நிலை ஏற்படும். இதற்கு ஏற்ப மாணவர்களின் தேவைக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் கல்லூரி வளாகத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதிகம் பேர் தேர்வு எழுத வசதியாக தற்போதுள்ள தேர்வுக்கூடத்தைவிட பெரிய அளவில் தேர்வுக்கூடம், பெரிய விரிவுரை கூடம், கூடுதல் நூலகம் ஆகிய கட்டிடங்கள் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. இதுபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிர் வரிசையில் ஆடவர் விடுதி உள்ள பகுதி அருகே ஆசிரியர் அல்லாத பணியாளர் குடியிருப்பும் கட்டப்படுகிறது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கின்றன. இதனால் வரும் ஆண்டுகளில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மேலும் பலம் மிக்கதாக மாறும்.

Tags : Paddy, Medical College, Lecture Room, Selection, Library
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...