மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு: கொத்தமல்லி கிலோ ரூ.200க்கு விற்பனை

நெல்லை: மார்க்கெட்டுகளுக்கு கொத்தமல்லி வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் காய்கறி வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் மருந்துக்கு கூட கொத்தமல்லியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொத்தமல்லி இலைகள் வாசனை பொருளாகவும், மருந்து பொருளாகவும் உள்ளது. வீட்டு சமையலில் வாசனைக்காக கொத்தமல்லி இலைகளை தூவுவது உண்டு. காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை ஒரு கட்டு வாங்கி வருவது வழக்கம். ஆனால் தற்போது நெல்லை, பாளை மார்க்கெட்டுகளில் கொத்தமல்லி இலைகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

இதன் விளைவாக கடந்த ஒரு வாரமாக கொத்தமல்லி இலைகள் ஒரு கிலோ ரூ.180 முதல் 210 வரை விற்பனையாகி வருகிறது. சில சமயங்களில் அவ்வளவு தொகை கிடைத்தாலும் கொத்தமல்லி கிடைப்பதில்லை. மார்க்ெகட்டுகளில் காய்கறி வாங்கும் வாடிக்கையாளர்கள் கருவேப்பிலை மற்றும் மல்லி ஒரு இணுக்கு இலவசமாக பெற்று செல்வதுண்டு. தற்போது ஒரு இணுக்கு கொத்தமல்லி இலை ரூ.10க்கு விற்கப்படுகிறது. கொத்தமல்லி இலைகள் தட்டுப்பாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் அவை விளையும் இடங்களான கீழப்பாவூர், பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் வறட்சியே காரணமாக கூறப்படுகிறது.

போதிய தண்ணீரின்றி கொத்தமல்லி இலைகளை பயிரிட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கொத்தமல்லி இலைகள் வரவழைக்கப்படுகின்றன. கொத்தமல்லி விலையேற்றம் குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கொத்தமல்லி விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம் என்றாலும், கடந்த மே மாதம் கொளுத்திய வெயிலில் கொத்தமல்லி தழைகள் வாடிவிட்டன. பொதுவாக மே கடைசியிலும், ஜூன் மாதத்திலும் கொத்தமல்லி விலையேற்றம் ஏற்படுவது வாடிக்கை. இவ்வாண்டு வறட்சியால் கூடுதல் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: