சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பெருமகிழச்சியில் பொதுமக்கள் ஆனந்த கண்ணீர்

சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கோடைக்காலம் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. சென்னையில் கடந்த 5 நாட்களில் 3 முறை மழை  பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல இடங்களில்  கனமழை பெய்து வருகிறது.

சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், தி நகர், வளசரவாக்கம், அசோக்பில்லர், வடபழனி, அண்ணா நகர், சாலிகிராமம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  அதைபோன்று தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, தரமணி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பல்லாவரம், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கே.கே.நகர், போரூர், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர்,  திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தனி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் விழுப்புரத்திலும் மழை பெய்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சத்தால்  சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது; அடுத்த சில மணி நேரங்களுக்கு இது நீடிக்கும் நாளை முதல் சென்னையில் மழை  படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையால் வடதமிழகம், தென்தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரீனா சாலை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், பெரியமேடு, ஆயிரம் விளக்கு,  கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நுங்கம்பாக்கம் சுமார் 15 நிமிடமாக மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி  ஏற்பட்டுள்ளது.

Related Stories: