×

பருவமழை பொய்த்ததால் 75 ஆண்டுகளில் 16வது முறையாக வறட்சியை சந்திக்கும் பூண்டி ஏரி

திருவள்ளூர்: பருவமழை பொய்த்ததாலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து இல்லாததாலும், பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு கிடக்கிறது. சென்னை பொதுப்பணி துறையினரால் ரூ.65 லட்சம் மதிப்பில் கடந்த 1940ம் ஆண்டு பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டும் பணி துவங்கியது. 16 பெரிய மதகுகளை கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி. 34.98 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 138 அடியும், ஏரியின் நீர்மட்ட உயரம் 35 அடியாகவும் அமைக்கப்பட்டது.

1944ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தை, ஜூன் 14ம் தேதி அப்போதைய சென்னை மேயராக இருந்த ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார். தற்போது பூண்டி ஏரிக்கு 75 வயது. இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக தண்ணீர் பெறப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீருக்காக, இணைப்பு கால்வாய் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2015, நவம்பரில் பெய்த பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியது. 2015, நவம்பர் 16ம் தேதி பூண்டி ஏரியின் மொத்த நீர்மட்டமான 35 அடியில் 34 அடி வரை நிரம்பியதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. அந்த நீரை தேக்கி வைக்க வசதியில்லாததால் வீணாக கடலில் கலந்தது.

இந்நிலையில் 2016, 2017, 2018 ஆண்டுகளில் அனைவரும் பருவமழையை எதிர்பார்த்து தயாராக இருந்த நிலையிலும், மாவட்ட நிர்வாகம் பல கோடி செலவில் முன்னேற்பாடுகளை செய்த நிலையிலும் பருவழை பொய்த்து போனது. இதனால், திருவள்ளூர் பகுதியிலும் நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து ஆங்காங்கே குடிநீர் வழங்க கோரி சாலை மறியல், ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. 1944ம் ஆண்டு முதல் தற்போது வரை  75 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் முழு அளவு வறட்சியை பூண்டி ஏரி சந்தித்துள்ளது. குறிப்பாக, 1948 முதல் 1952 வரை 5 ஆண்டுகள், 1969, 1974, 1983, 1987 முதல் 1991 வரை 5 ஆண்டுகள், 2000, 2013 என 15 ஆண்டுகள் பூண்டி ஏரி பூஜ்ய நிலை அளவிற்கு வறண்டுள்ளது. தற்போது வறட்சியினால் நடப்பாண்டு 16வது ஆண்டாக முற்றிலும் வறண்டு கிடக்கிறது. பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் செல்ல இயலாமல் கால்வாயும் வறண்டு கிடக்கிறது.

செத்து மிதக்கும் மீன்கள்

முற்றிலும் வறண்ட பூண்டி ஏரியில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் குட்டைபோல தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று ஏரியிலிருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. அவைகளை காக்கைகள் கொத்தி சென்று ஆங்காங்கே வீசி செல்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. ஏரியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதை சுகாதார துறை அலுவலர்களும் கண்டு கொள்ளவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர்களும் வந்து பார்க்கவில்லை. சுற்றுலா தலமான பூண்டி நீர்த்த தேக்கமே நாறி கிடப்பதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வருவதில்லை. கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் சிலர், செத்து கிடக்கும் மீன்களையும் விட்டு வைக்காமல் விற்பதாகவும், இதனால் மீன்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மீன்கள் இறப்பதற்கு அதிகப்படியான வெப்பமே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இயற்கையாகவே, மீன்கள் மிகவும் மிருதுவானவை. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், நீரின் அளவு குறைய தொடங்கியதால், மீன்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்திருக்கலாம். வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான மரங்கள் ஏரியை சுற்றி இல்லாததாலும், ஏரியில் கலக்கும் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் போன்ற எதிர்வினைகள் நீரில் கலந்து ஆக்ஸிஜனின் அளவை குறைக்கின்றன. இதனால் மீன்கள் இறந்திருக்கலாம் என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Monsoon, Drought, Boondi Lake
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்