காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்து நடவடிக்கை: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: காவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜன் என்பவர் மீது பறிமுதல் செய்யப்பட்ட தங்க மோதிரத்தை திரும்ப வழங்க ரூ.1000 பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,  டி.எம்.தேவராஜன் 2007-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். டி.எம்.தேவராஜன் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆய்வு பெற வேண்டி இருந்தார். ஆனால் துறை ரீதியாகன விசாரணை நிலுவையில் இருப்பதாக கூறி ஓய்வு பெற அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கிடையே, காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜனுக்கு மதுரை குற்றப்பிரிவு காவலர் குடியிருப்பில் 08.09.2006 முதல் 25.11.2013 வரை அனுமதியில்லாமல் வசித்ததற்காக ரூ.2,22,740 வாடகை பாக்கி செலுத்த நோட்டீஸ் அனுப்பபட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரர் நிர்வாக காரணத்துக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், மதுரை குற்றப்பிரிவு காவலர் குடியிருப்பை காலி செய்யவில்லை, மதுரையில் பணியில், இல்லாத நாட்களில் குடியிருப்பில் தங்கியதற்கு வாடகை கட்டணமாக இந்த தொகை வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, காவல்துறையில் ஒழுக்கம் என்பது இதயத்தை போன்றது,. குடியிருப்புகளை காலி செய்வதிலும் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். இடமாற்றம், ஓய்வு பணி நீக்கத்துக்கு ஆளாகும் காவலர்கள் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். காவல்துறை ஒழுக்க விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளும், நீதிமன்றமும் சமரசம் செய்யக்கூடாது. இதில் சமரசம் செய்தால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குடியிருப்பு காலி செய்வது, பராமரிப்பு போன்ற பணிகளை காவல்துறை  உயர்அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். போலீசார் ஆண்டின் அனைத்து நாட்களிலும் பணியாற்றுகின்றனர். மழை, வெயில், குளிர் காலங்களிலும் கடமையாற்றுகின்றனர். அப்படிப்பட்ட போலீசாருக்கு பணிச்சலுகை, நலத்திட்டங்கள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.போலீசார் ஒருவர் கூட தனக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் கிடைக்கவில்லை என நினைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் காவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய தனிக்குழு அமைத்து, குழுவின் அடிப்படையில், சட்டவிரோதமாக குடியிருக்கும் காவலர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

Related Stories: