×

திருவள்ளூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வரும் நிலையில், கிடப்பில் போட்டுள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உடனடியாக மீண்டும் அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு கோடை காலத்திலும் குடிநீர் பிரச்னையை நிலத்தடிநீர் தான் காப்பாற்றி வந்தது. இந்நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீர் எடுத்ததாலும், திருட்டுத்தனமாக சிலர் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்றதாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதையடுத்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்த முந்தைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புக்கள் கட்டாயமாக்கப்பட்டது.

புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறிப்பிட்டிருந்தால் மட்டுமே உள்ளாட்சிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த, 7 ஆண்டுகளாக மழைநீர் சேகரிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டு விடப்பட்டது. அரசு கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புக்களும் பராமரிக்காமல் விடப்பட்டன. இதனால், அவை சீர்குலைந்து மழை நீரை சேமிக்கும் சக்தியை இழந்தன. தொடர்ந்து பல ஆண்டுகளாக மழைநீர் சேகரிப்பு திட்டம் புறக்கணிக்கப்பட்டதால் இன்றைக்கு மாவட்டத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் பெரும்பாலானவை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமெனில், உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். புறநகர் பகுதிகளில் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இக்குடியிருப்புகளுக்கு அனுமதி தரும் உள்ளாட்சி நிர்வாகங்கள், மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை, உறுதிப்படுத்தியபின்பு கட்டட அனுமதி வழங்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீர் வீணாவதை தடுக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகர்மயமாதல், தொழில் நிறுவனங்கள் அதிகரித்தல் போன்ற காரணங்களால் நீர் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறைந்த காலத்தில் அதிகளவு மழை பெய்து விடுவதால், 65 சதவீத மழைநீர் கடலில் கலப்பதால் வீணாகிறது. பெரும்பாலான வீடுகளில், வீட்டை சுற்றி உள்ள இடங்களை சிமென்ட் தரையாக மாற்றி விடுகின்றனர். இதனால், வீடுகளில் பெய்யும் மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் வழிந்தோடி கால்வாய் மூலம் வெளியேறி விடுகிறது. எனவே, மழைநீரை வீணாக்காமல் பாதுகாக்க, மழைநீர் சேகரிப்பு திட்டம் தான் ஒரே வழி. இவ்வாறு மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் தேவையான நீர் கிடைக்கும்.

Tags : Thiruvallur, Rainwater Harvesting Project
× RELATED சுற்றுச்சூழல் நிலையை பாதுகாக்க திட்டம்: சட்ட முன்வடிவு தாக்கல்