திருத்தணி நகராட்சியில் குளத்தை சீரமைக்காமல் சுற்றுச்சுவர் அமைப்பு: மக்கள் வேதனை

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தை தூர்வாரி சீரமைக்காமல், அதன் கரைகளில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெறுவதை கண்டு மக்கள் வேதனைப்படுகின்றனர். திருத்தணி நகராட்சியில், காந்தி ரோடு பகுதியில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்குளத்து நீரை குடிப்பதற்கு மக்கள் பயன்படுத்தி வந்தனர். அதன்பிறகு இந்த குளம் வறண்டு போனதால், கடந்த சில  ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் கால்வாயை இணைக்க நகராட்சி நிர்வாகம் முயற்சித்தது.

  இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கைவிட்டது. தற்போது நல்ல தண்ணீர் குளத்தை சுற்றிலும் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் குளக்கரை சீரமைத்தல்,  சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் நடைபாதை அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

  இக்குளத்தை மூன்று அடி ஆழத்துக்கு தூர்வாரி சீரமைத்தால்தான் இங்கு மழைநீரை சேமிக்க முடியும். இதனால் அருகில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தற்போது நடைபெறும் பணிகளுக்கு இடையே, நல்ல தண்ணீர் குளத்தை ஆழமாக  தூர்வாரி சீரமைக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில், இக்குளத்தில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீரும் வெகுவாக மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே, இக்குளத்தை தூர்வாரி சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: