ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரியை பேட்டால் தாக்கிய பாரதிய ஜனதா எம்எல்ஏ கைது

இந்தூர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரியை பேட்டால் தாக்கிய பாரதிய ஜனதா எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பொது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பாரதிய ஜனதா எம்எல்ஏ ஆகாஷ் விஜயவர்கியா, கிரிக்கெட் பேட்டால் மாநகராட்சி அதிகாரியை தாக்கினார். அவர் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. அதில் பொதுமக்கள் கூட்டத்தின் நடுவே, செய்தியாளர்கள் படம்பிடித்துக் கொண்டிருக்கும் போதே பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ், அதிகாரியை தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

மேலும் அவருடன் வந்த அவரது ஆதரவாளர்களும் அதிகாரியை விடாமல் விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தன. தாக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா மிரட்டியதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. எனவே, அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரியை தாக்கிய எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: