விடுதலை புலிகள் இயக்கத்தை ஏன் சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ்

புதுடெல்லி: விடுதலை புலிகள் இயக்கத்தை ஏன் சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் இலங்கையைச் சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட 5 ஆண்டுகளுக்கு விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கம் என்று அறிவிக்க போதுமான காரணம் உள்ளதா, இல்லையா என விசாரணை செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை விசாரணை நீதிபதியிடம் நேரில் விளக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் 11ம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், விளக்கம் அளிக்க, ஜூலை 26ம் தேதி வரை, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்பின் சார்பில், தமிழக அரசு இந்த பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related Stories: