ஜூன் 28ல் அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு: மானிய கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

சென்னை: வருகிற 28ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . சட்டமன்றத்தில் நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 28ம் தேதி மீண்டும் சட்டப்பேரவைக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், நாளை மறுநாள் தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின் போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு, புதிய சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Advertising
Advertising

மேலும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிப்புகளாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 28ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகின்ற 28ம் தேதி காலை 11 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: