கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துதே தமிழக அரசின் லட்சியம் : முதல்வர் பழனிசாமி

சென்னை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது என்பதே தமிழக அரசின் லட்சியம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரும் 28ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வசம் உள்ள பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் மானிய கோரிக்கைகளை ஜூலை 15ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். நெடுஞ்சாலை தொடர்பாக கடந்த சனிக்கிழமை அன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகளின் நிலை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் அணைகள் பாதுகாப்பு, அணைகள் பராமரிப்பு, காவிரி - கோதாவரி திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் வண்டல் மண் எடுப்பதன் மூலம் விவசாயிகள் அதிக பலன் பெற்று வருவதாக தெரிவித்த முதல்வர்,  ஒத்துழைப்பை அதிகாரிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.

Related Stories: