மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா..: நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

புதுடெல்லி: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மோட்டார வாகன சட்டத்தில் சில மாற்றங்கள் செய்வதற்கான சட்ட மசோதா முந்தைய ஆட்சியின்போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழவே இந்த மசோதா சிக்கலை சந்தித்தது. ஆட்சிக்காலம் முடிந்து மக்களவை கலைக்கப்படவே, அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில், சாலை பாதுகாப்பு ஆர்வலர்களின் ஆலோசனைகளோடு அதே மசோதாவானது, சில திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது புதிய மசோதா என்பதால், மீண்டும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரித்து வசூலிக்க, இந்த மசோதா வழிவகை செய்யும். அதன்படி சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், இதற்கு முன்பு ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதா நிறைவேறினால் அபராதமானது ரூ.1000 ஆக அதிகரிக்கப்படும். தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 என்றிருந்த அபராதம் ரூ.1000 ஆக அதிகரிக்கப்படுவதுடன், 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடவில்லை எனில், ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். இந்த விதிமீறலுக்கு தற்போது ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை மீறி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரித்து வசூலிக்கப்படும்.

மது குடித்துவிட்ட வாகனம் ஓட்டினால், ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படவுள்ளது. வேகமாக வாகனத்தை ஓட்டுதல், பந்தயத்தில் ஈடுபடுதல் போன்ற விதிமீறல்களுக்கு ரூ.5,000 வரை அபராம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்யும். அதிகளவு பாரம் ஏற்றினால் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டு, டன்னுக்கு தலா ரூ.2,000 வீதம் வசூலிக்கப்படும். சிறுவர்கள் வாகனம் ஓட்டி விதிமீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்பட்டால் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். மேலும், வாகனப்பதிவும் ரத்து செய்யப்படும். இவை மட்டுமல்லாமல் விபத்தை ஏற்படுத்துவிட்டு தப்பிச்செல்லும் நபர்களால் பாதிக்கப்படுவோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும்.

மோசமான சாலைகளால் விபத்து ஏற்பட்டால் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் வரை அபராத் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. உரிம நிபந்தனைகளை மீறும் கால் டாக்சி நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும்.  முன்னதாக சிக்னல் விதிமீறலுக்கு விதிக்கப்பட்ட ரூ.100க்கு பதிலாக 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. அதேபோன்று, போக்குவரத்து காவல்துறை அதிகாரியின் உத்தரவிற்கு சாலையில் கட்டுப்படாதவாறு செயல்பட்டால், ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வந்தது. உரிமம் இல்லாத வாகனங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துபவர்களுக்கு ரூ .5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதேசமயம், அந்த வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால், ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் போன்ற திருத்தங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

Related Stories: