×

வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன்..: போலீசில் சரண்!

மேட்டுப்பாளையம்: வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் போலீசில் சரணடைந்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பசாமி(வயது 45). இவரது மனைவி பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத்(25), கனகராஜ்(22), கார்த்திக்(19) மூவரும் பாரம் தூக்கும் தொழில் செய்து வருகின்றனர். கனகராஜும் வெள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த வர்ஷிணி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் மீண்டும் காதலன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கனகராஜின் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய தந்தை கருப்பசாமி, தன்னுடைய மகன் கனகராஜிடம், காதலியை வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுமாறும், பிரச்சினை தீர்ந்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கனகராஜ், காதலியை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார்.

இது கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கனகராஜ் தங்கியிருந்த வீட்டுக்கு அவரது அண்ணன் வினோத் நேற்று மாலை சென்றார். வேறு சாதியை சேர்ந்த வர்ஷிணி பிரியாவை திருமணம் செய்யக்கூடாது என கனகராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வினோத் வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டுப்பட்ட கனகராஜ் அதே இடத்தில் இறந்தார். இதை தடுக்க வந்த வர்ஷிணி பிரியாவையும் வினோத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பிரியா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மேட்டுப்பாளையம் போலீசார் தலைமறைவாக இருந்த வினோத் குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில், காதல் திருமணம் செய்ய முயன்ற தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் இன்று காலை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Coimbatore, brother, brother, murder, love couple, homicide
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...