தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம்: விவசாயிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் அமைக்க வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. ஆனால், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் தீவிரப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வயல்வெளியில் இறங்கி போராட்டம், உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாய சங்கத்தினரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. இதுகுறித்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் ஹைட்ரோ கார்பன் துறை பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியா, 82% கச்சா எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்கிறது. ஆனால், 2022ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10% வரை குறைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கினை அடைய ஓ.என்.ஜி.சி, மேலும் மேம்பாட்டு கிணறுகளை துளையிட்டு முடிக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் காவிரி டெல்டா பகுதியில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும், என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்தக் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சாவூரில் 18 கிணறுகள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கடலூரில் 7 கிணறுகளும், அரியலூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 3 கிணறுகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஹைட்ரோகார்பன் கிணறுக்கும் தலா 15 கோடி ரூபாய் வீதம் 1,560 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: