போதை வாலிபர்கள் ஓட்டிய பைக் மோதி இறந்த மனைவி சடலத்துடன் டாக்டர் மறியல்: டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்,.. கோவை அருகே 6 மணி நேர பரபரப்பு

பெ.நா.பாளையம்: போதை வாலிபர்கள் ஓட்டிய பைக் மோதி மனைவி இறந்தார். இதனால், டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மனைவி சடலத்துடன் டாக்டர் 4 மணி நேரம் மறியலில் ஈடுபட்டார். இதனால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.  கோவை தடாகம் ரோடு கணுவாய்  விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்; டாக்டர். இவரது மனைவி ஷோபனா  (46). இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் ஆனைகட்டி பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் ஷோபனா அவரது  மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதும், பள்ளி முடிந்ததும்  மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம்.

நேற்று  முன்தினம் மாலை வழக்கம் போல் ஷோபனா தனது மகளை பள்ளியில் இருந்து டூவீலரில் அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  ஜம்புகண்டி அரசு பள்ளி அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர  வாகனத்தில் வந்த பாலாஜி, அசோகன் ஆகிய வாலிபர்கள் ஷோபனா வாகனம் மீது மோதி  விபத்தை ஏற்படுத்தியதில் ஷோபனா பரிதாபமாக பலியானார்.அவரது மகள்  படுகாயம் அடைந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், வாலிபர்கள் இருவரும் அருகில் உள்ள  டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்ததாகவும் இதனால்தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அடிக்கடி இங்கு விபத்து நடக்கிறது எனக் கூறி மனைவியின் சடலத்துடன் டாக்டர் ரமேஷ் கண்ணீர் மல்க சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடன் பொதுமக்களும் இணைந்து மறியல் செய்தனர். 6 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. இதுகுறித்து தகவலறிந்த தடாகம் போலீசார் பேச்சுநடத்தினர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு  தாசில்தார் விஜயகுமார் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை நேற்று முதல் தற்காலிகமாக  மூடப்படுவதாகவும் கடையை வேறு இடத்துக்கு மாற்ற உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. ஷோபனாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 6 மணி  நேரம் நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டது. 

Related Stories: