×

புழல் 22, 23, 24 மற்றும் 25வது வார்டுகளில் ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

புழல்: புழல் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 22, 23, 24 மற்றும் 25வது வார்டுக்கு உட்பட்ட புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், லட்சுமிபுரம், சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த வார்டுகளில் சிறிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, அதிலிருந்து பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட இந்த தொட்டிகள் தற்போது, சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இவற்றை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்பேரில், புழல் மகளிர் சிறைச்சாலை அருகே, கண்ணப்பசாமி நகர், கதிர்வேடு எம்ஜிஆர் நகர், லட்சுமிபுரம் வில்லிவாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்ததது. இதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புழல் மகளிர் சிறைச்சாலை அருகே, 55 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டும் பணி 90 சதவீதம் முடிந்த நிலையில் கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பல லட்சத்தில் தொடங்கிய குடிநீர் திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குடிநீர் தொட்டி கட்டுமான பணியை எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணம் வழங்காததால் பணியை பாதியிலேயே விட்டு விட்டு சென்றனர். இதனால், இந்த பணிகள் தொடராமல் பதியிலேயே நிற்கிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். பொதுமக்கள் கூறுகையில், ‘‘குடிநீர் வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால், பல லட்சம் செலவில் தொடங்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது. இதனால், தற்போது, மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, பாதியிலேயே நிற்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Authorities,allege construction ,tanker,one year, wards 22, 23, 24 and 25
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...