×

பல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை

சிவகங்கை: இளங்கலை வரலாறு முடித்து அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில், இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் வரலாறு தவிர்த்த பிற பாடங்கள் படித்தும் முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு (கிராஸ் மேஜர்) 3 பணியிடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2012ல் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 26.05.2016ல் 1:3ன்படி பதவி உயர்வு வழங்க தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால் 2016 முதல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் அடுத்த மாதம் அனைத்து பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்கான முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் வரலாறு பாடத்திற்கு மட்டும் எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால் வரலாறு பாட ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறுகையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  அனைத்து பாடங்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும்போது, வரலாறு பாடத்திற்கு நடத்தாததால் கடும் ஏமாற்றத்துடன் உள்ளோம். இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்த ஆசிரியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நியாயமான எங்கள் கோரிக்கையை ஏற்று பதவி உயர்வு வழங்கவும், வழக்கை முடிவிற்கு கொண்டு வரவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.



Tags : Master , History , promotion consultation
× RELATED ஜன.16 முழு ஊரடங்கு என்பதால்...