வேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்திருந்த செல்போன், சார்ஜர் சிக்கியது

வேலூர்:  வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் பிளாஸ்டிக் கவரில் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 சிம்கார்டுகளை சிறை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து, சைபர் க்ரைம் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் சிறை வளாகத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் ஆகியவற்றை சிறை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த சில நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அருகிலேயே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அடுத்தடுத்து செல்போன்கள் சிக்குவதால் சிறைத்துறை போலீசாரே இதற்கு உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதன்பேரில், சிறை வளாகம் முழுவதும் நவீன கருவிகள் வைத்து ஸ்கேன் செய்ய அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர். மேலும் செல்போன், கஞ்சா சோதனை செய்யும் கியூஆர்டி பிரிவில் உள்ளவர்களிடம் தகவல்களை திரட்டுவதில் சிறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் சப்ளை செய்த விவகாரத்தில் சிறை போலீசார் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், செல்போன் புழக்கம் அதிகரித்துள்ள விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: