சுதந்திரத்துக்கு பின் மானியமின்றி 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்: மத்திய அமைச்சர் நக்வி தகவல்

புதுடெல்லி: ‘‘சுதந்திரத்துக்கு பின் முதல்முறையாக இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் மானியமின்றி ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்,’’ என மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். ஹஜ் புனித பயண ஏற்பாடுகளை செய்யும் பணியாளர்களுக்கான 2 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில், மத்திய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து மானியம் ஏதுமின்றி 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 21 இடங்களில் இருந்து 500 விமானங்களில் அவர்கள் புறப்பட உள்ளனர். இதில் 1.40 லட்சம் பயணிகள் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 60,000 பேர் ஹஜ் குழு அமைப்பாளர்கள் மூலமும் பயணம் செல்ல உள்ளனர். இதில், 2340 பெண்கள் ஆண் துணையின்றி தனியாக இந்த புனித பயணம் செல்கின்றனர்.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1180 ஆக இருந்தது. புனித பயணம் செல்வோர் வசதிக்காக மெக்காவில் 16 சுகாதார மையங்களும், மதினாவில் 3 சுகாதார மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு பயணம் தொடர்பான தகவல்கள், மக்கா மற்றும் மதினாவில் தங்கும் இடம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.நாட்டில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 31ம் தேதி வரை பல்வேறு இடங்களில் இருந்து ஹஜ் பயண விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்்னையில் இருந்து ஜூலை 31ம் தேதியில் ஹஜ் விமானம் செல்லும்.

‘மிகப்பெரிய குற்றம்’

நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நக்வியிடம், ‘ஜார்க்கண்டில் டெப்ரேஷ் அன்சாரி என்பவரை ஜெய்  ராம் என முழக்கமிடாததால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நக்வி கூறுகையில், `‘ ஜார்க்கண்டில் அன்சாரியை தாக்கியது மிகப்பெரிய குற்றம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் வகையில் தான் சம்மந்தப்பட்டவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

Related Stories: