எமர்ஜென்சியை எதிர்த்தவர்களை வணங்குகிறேன்: டிவிட்டரில் பிரதமர் கருத்து

புதுடெல்லி:  ‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்தவர்களை வணங்குகிறேன்,’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1975ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஜூன் 25ம் தேதி நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலையை பிரகடனம் செய்தார். 1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை இது அமலில் இருந்தது. அவசர நிலை கொண்டு வரப்பட்டு நேற்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது. இதை பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டரில் நினைவு கூர்ந்துள்ளார்.அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எமர்ஜென்சியை கடுமையாகவும், பயமின்றியும் எதிர்த்த மிகப் பெரியவர்களுக்கு இந்தியா வணக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் ஜனநாயக பண்புகள், ஒரு சர்வாதிகார மனநிலையை வெற்றிகரமாக வென்றுள்ளன,’ என்று கூறியுள்ளார்.

Advertising
Advertising

பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ‘எமர்ஜென்சியின் போது பத்திரிக்கைகள் மூடப்பட்டன. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக, அவரச நிலையை எதிர்த்து லட்சக்கணக்கான தேசபக்தர்கள் போராடினார்கள். அந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,’ என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.பாஜ. செயல் தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக 1975ல் ஜனநாயம் படுகொலை செய்யப்பட்டது. இது மிகப்பெரிய கருப்புக் கறை. எமர்ஜென்சிக்கு எதிராக பாரதிய ஜன சங்கம், ஆர்எஸ்எஸ்சின் ஆயிரக்கணக்கானோர் போராடினார்கள்’’ என்று கூறியுள்ளார்.

5 ஆண்டாக சூப்பர் எமர்ஜென்சி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘1975ம் ஆண்டு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் இன்று. கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலை நிலவுகிறது. வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் ஜனநாயக அமைப்புக்களை பாதுகாப்பதற்காக போராட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

மீண்டும் அனுமதிக்கக்கூடாது

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், ‘44 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அப்போதைய பிரதமரால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் மூலம், இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொண்டது. இந்த மாபெரும் ஜனநாயகத்தின் மீது மீண்டும் எமர்ஜென்சியை கொண்டு வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்போம்,’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: