குஜராத் மாநிலங்களவை தேர்தல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மனு தாக்கல்

காந்தி நகர்: குஜராத்தில்  நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மத்திய  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தாக்கல் செய்தார்.குஜராத்  மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அமித் ஷாவும், ஸ்மிருதி இரானியும் கடந்த  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது இவர்கள் முறையே மத்திய உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்களாக உள்ளனர். இதனால், குஜராத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது.கடந்த முறை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் வெளியுறவு செயலராக பணியாற்றிய  ஜெய்சங்கர், மோடியின் 2வது ஆட்சியில் கேபினட் அமைச்சராக சேர்த்துக்  கொள்ளப்பட்டார். வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர்,  நேற்று முன்தினம் பாஜ  செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் முறைப்படி இணைந்தார்.

Advertising
Advertising

எம்பி.யாக இல்லாமல் மத்திய அமைச்சராக பதவியேற்பவர்கள், அடுத்த 6 மாதங்களுக்குள்  நாடாளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவை தேர்தலில் வெற்றி  பெற்றால்தான் பதவியில் தொடர முடியும். இந்நிலையில், குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பாஜ சார்பில் வேட்புமனு தாக்கல்  செய்தார். மற்றொரு இடத்துக்கு குஜராத்  மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுத் தலைவர் ஜூகல்ஜி தாகூர் வேட்புமனு  தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மாநில பாஜ  தலைவர் ஜித்து வகானி ஆகியோர் உடனிருந்தனர். காங்கிரஸ் சார்பில் கவுரவ் பாண்டியா, சந்திரிகா சுதாசமா ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். வேட்புமனு  தாக்கல் நேற்று மாலையுடன் முடிந்தது. இன்று மனுக்கள் பரிசீலனை  செய்யப்படும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வரும் 28ம் தேதி கடைசி  நாளாகும்.

உச்ச நீதிமன்றத்தில் காங். மனு தள்ளுபடி

குஜராத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதை எதிர்த்தும், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என கோரியும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரேஷ்பாய் தனானி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய் ஆகியோர் நேற்று இதை விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ‘வேண்டுமானால், தேர்தல் முடிவு வெளியான பிறகு, வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம்,’ என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

Related Stories: