மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி எம்.பி. நடிகை நவ்நீத் கவுர் பாஜ.வில் சேர திட்டம்?: அமித் ஷாவை சந்தித்து பேசினார்

மும்பை: மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யும் முன்னாள் நடிகையுமான நவ்நீத் கவுர் ரானா பாஜ.வில் சேரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நவ்நீத் கவுரின் கணவர் ரவி ரானா, அமராவதி மாவட்டத்தில் உள்ள பட்நேரா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர் யுவா பிரதிஷ்டாண் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவுடன் ரவி ரானா பட்நேரா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதே போன்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் ரவி ரானா தனது மனைவி நவ்நீத்தை அமராவதி தொகுதியில் சுயேச்சையாக நிறுத்தினார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவளித்தன. காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில்தான் நவ்நீத் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், ரவி ரானாவும் நவ்நீத்தும் தேசியவாத காங்கிரசுக்கு நெருக்கமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் பாஜ தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நவ்நீத் சந்தித்து பேசினார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெருந்தலைகள் பலர் பாஜ.வுக்கு தாவி வரும் நிலையில், அவர்களை பின்பற்றி நவ்நீத் மற்றும் அவரது கணவர் ரவி ரானா ஆகியோரும் பாஜ,வில் சேர திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு முன்னோடியாகத்தான் அமித்ஷாவை நவ்நீத் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த சந்திப்பு குறித்து நவ்நீத்திடம் கேட்டதற்கு, ‘‘அமராவதி தொகுதியை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்றுவதே எனது குறிக்கோள். தொகுதி மேம்பாட்டு பிரச்னைகள் குறித்து பேசுவதற்காகத்தான் அமித்ஷாவை சந்தித்து பேசினேன்’’ என்றார்.முதல் முறையாக எம்.பி.யாகியிருக்கும் நவ்நீத், கருணாசுடன் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் ரவி ரானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2011ம் ஆண்டு அமராவதியில் 3,100 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் ரவி ரானா திருமணம் செய்து வைத்தார். அதே விழாவில்தான் ரவி ரானா-நவ்நீத் திருமணமும் நடந்தது.

Related Stories: