அக்.1 முதல் பெட்டி மதுக்கடைகள் மூட வேண்டும் நெடுஞ்சாலையையொட்டி மதுக்கடை இருக்கக்கூடாது: ஆந்திர எஸ்பிக்கள் மாநாட்டில் முதல்வர் உத்தரவு

திருமலை: ஆந்திராவின் உண்டவல்லியில் உள்ள பிரஜா வேதிகாவில் கலெக்டர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் நேற்று 13 மாவட்ட எஸ்பிக்களுக்கான மாநாடு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமே லட்சியமாக இருக்க வேண்டும். கலெக்டர்கள் எஸ்பிக்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை  ஊழியர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். போலீசார் மனிதாபிமானத்துடன் பணிபுரிய வேண்டும். அவப்பெயர் வரக்கூடிய பணியை யாரும் செய்ய வேண்டாம். ஈகோவை விட்டு பணிபுரிய வேண்டும். கடந்த ஆட்சியின் போது முதல்வர் வீட்டின் அருகிலேயே மணல் மாபியா நடைபெற்றது.

Advertising
Advertising

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மணல் மாபியாவை தடுக்க முயன்ற மண்டல வருவாய் அலுவலரை, ஒரு மக்கள் பிரதிநிதி பெண் என்றும் பாராமல் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற பல்வேறு சம்பவங்களை நம் கண்ணெதிரே பார்த்தோம். ஆனால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஆனால் குண்டூர் மாவட்டத்தில் நிலம் வழங்காத விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ள நிலையில் எப்படி ஆந்திர போலீசார் நம்பர் ஒன் இடத்தை பெற முடியும். புகார் அளிக்க வருபவர்களை கவுரவமாக வரவேற்று போலீசார் புகார்களை பெற வேண்டும். மாவட்ட கண்காணிப்பாளர்கள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அக்டோபர் 1ம் தேதி மாநிலம் முழுவதும் பெல்ட் ஷாப்கள் (அனுமதியில்லாமல் மது விற்கும் பெட்டி கடைகள்) முழுவதுமாக மூடப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மதுக்கடைகள் இருக்கக் கூடாது. தாபாக்களில்  மது விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஏற்கனவே தமிழகத்திலும், கேரளாவிலும் மது விற்பனையை அரசே மேற்கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்க முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டிருந்தார். இதனால் தற்போது புதிதாக மது விற்பனைக்கான லைசென்ஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு மகனுக்கு பாதுகாப்பு குறைப்பு

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு இசட் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இசட் பாதுகாப்பை திரும்ப பெற முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, சந்திரபாபு நாயுடு மக்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வந்த கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட சொகுசு வீட்டையும், மாநாடு கட்டிடத்தையும் இடிக்க ஜெகன் மோகன் நேற்று முன்தினம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: