பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 25 ஆயிரம் அபராதம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு ₹25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாக கேரளா விளங்கி வருகிறது. இங்கு பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் பல பகுதிகளில் இரவு நேரங்களில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி செல்பவர்களும் உண்டு. இதனால் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கேமரா இல்லாத ஒதுக்குப்புறமான பகுதிகளில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியில் சிலர் இரவில் குப்பைகளை கொட்டுவதாக திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இப்பகுதியில் தான் ஆளுநர் மாளிகை மற்றும் சில அமைச்சர்களின் வீடுகளும் அமைந்துள்ளன. இதையடுத்து அப்பகுதியில் குப்பை கொட்டுபவர்களை பிடிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மினு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று அதிகாலையில் அப்பகுதியை ரகசியமாக கண்காணித்தனர்.

அதிகாலை 4.30 மணியளவில் ஒருவர் காரில் வந்து குப்பைகளை கொட்டினார். இதையடுத்து அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கானூரை சேர்ந்த சுனில்குமார் என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ₹25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை மாநகராட்சி அலுவலகம் சென்று சுனில்குமார் செலுத்தினார்.

Related Stories: