200 கோடியில் ஆடம்பர திருமணம் ஆலி மலைப்பகுதியில் குவிந்த குப்பை மலை: உத்தரகாண்டில் சர்ச்சை

ஆலி: உத்தரகாண்டில் 200 கோடியில் நடந்த ஆடம்பர திருமணத்தின் காரணமாக குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் குப்தா வீட்டு திருமணம் உத்தரகாண்டில் உள்ள ஆலி மலைப் பகுதியில் நடந்தது. அஜய் குப்தாவின் மகன் சூர்ய காந்தின் திருமணம் கடந்த 18ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரையிலும், அதுல் குப்தாவின் மகன் ஷஷாங்கின் திருமணம் கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்த இரண்டு திருமணங்களுக்காக மொத்தம் ₹200 கோடி செலவிடப்பட்டது. இந்த விழாவில் மாநில முதல்வர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்று 2 மணி நேரம் யோகா பயிற்சி அளித்தார். திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்காக வாடகை ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் என அனைத்திலும் திருமணத்துக்கு வந்தவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தன. திருமண விழா அலங்காரத்துக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து பூக்கள் வாங்கப்பட்டு இருந்தன.

Advertising
Advertising

ஒரு வாரம் திருமண விழா கொண்டாட்டம் களைகட்டியது. திருமணம் முடிந்த நிலையில் அங்கு தேங்கிக் கிடந்த குப்பை கழிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது திருமணத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், திருமணம் முடிந்து அங்கு குவிந்த குப்பைகளை கண்டு அந்த பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் தின்றால் பாதிக்கப்படும் என்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து குப்பை கழிவுகளை அகற்றுவதற்கான மொத்த செலவையும் குப்தா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக ஆலி நகராட்சியில் ₹54 ஆயிரத்தை அவர்கள் டெபாசிட் செய்துள்ளனர். மொத்தம் 20 ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 150 குவிண்டால் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.  மொத்த குப்பைகளும் அகற்றப்பட்ட பின்னர் ஊழியர்களுக்கான தொகை, வாகனத்துக்கான கட்டணம் உள்ளிட்ட மொத்த செலவினங்களும் குப்தா குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே ஆடம்பர திருமணத்தால் குவிந்த குப்பைகள் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவை வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories: