நிதி ஆயோக் அறிக்கை சுகாதாரம், கல்வி வளர்ச்சி கேரளா மீண்டும் நம்பர்- 1

புதுடெல்லி: நிதி  ஆயோக் வெளியிட்ட சுகாதாரப் பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக  கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது. உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன், நிதி  ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.  அதன்படி, 2017-18க்கான சுகாதார பட்டியலை நிதி ஆயோக் நேற்று வெளியிட்டது. இதில்,  பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தையும் ஆந்திரா, மாகாராஷ்டிரா  2ம், 3ம் இடங்களையும் பிடித்துள்ளன. குஜராத், பஞ்சாப், இமாச்சல்  மாநிலங்கள் முறையே 4, 5 மற்றும் 6வது இடங்களை பெற்றுள்ளன.

Advertising
Advertising

சிறிய  மாநிலங்களில் மிசோரம் முதலிடத்தையும், செயல்திறன் வளர்ச்சி அடிப்படையில்  திரிபுரா, மணிப்பூர் முதல் இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன. சிக்கிம், அருணாச்சல மாநிலங்கள், ஒட்டு மொத்த செயல்திறன் வளர்ச்சியில் படுவீழ்ச்சி அடைந்துள்ளன. யூனியன்  பிரதேசத்தை பொறுத்தமட்டில், சண்டிகர் முதலிடத்தை பெற்றுள்ளது. கூடுதல்செயல்திறன் மேம்பாட்டில் அரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட் முதல் மூன்று  இடங்களை பிடித்துள்ளன. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கடைசி மாநிலங்களாக  உபி, பீகார், ஒடிசா உள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்கள்  நலன், அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றிலும் கேரளா  முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் சிறந்த ஆட்சி புரியும் மாநிலங்களின்  பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் சாதனை

பிறந்ததும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக 2030 ஆண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, தமிழகமும், கேரளாவும் இப்போது எட்டி விட்டதாக நிதி ஆயோக் அறிக்கையில் பாராட்டப்பட்டு உள்ளது. இம்மாநிலங்களில் தற்போது பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 12 குழந்தைகள் மட்டுமே இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: