முக்கிய பிரமுகர்களிடம் பேச்சு கேரளாவில் ரகசிய இடத்தில் தங்கதமிழ்ச்செல்வன் முகாம்: ஓரிரு நாளில் முக்கிய கட்சியில் ஐக்கியம்

சென்னை: கேரளாவில் ரகசிய இடத்தில் முகாமிட்டுள்ள தங்கதமிழ்செல்வன் சில முக்கிய பிரமுகர்களிடம் மட்டும் பேசி வருவதாகவும், ஓரிரு நாளில் அத்தனை கேள்விகளுக்கும் ‘விடை’ கிடைக்கும் என அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.அதிமுக பிளவுபட்டு டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட தொடங்கியதும், அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அமமுக கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் வலம் வந்த தங்கதமிழ்செல்வன், அந்த அணி சார்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பதும், டிவி விவாதங்களில் பங்கேற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையில் டி.டி.வி.தினகரனுக்கும், தங்கதமிழ்செல்வனுக்கும் இடையே அவ்வப்போது இருந்து வந்த கருத்து மோதல், மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரிய அளவில் வெடித்தது.

தங்கதமிழ்செல்வன் தன்னை திட்டுவதை அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த டி.டி.வி.தினகரன், கடந்த வாரம் தனது கட்சி நிர்வாகி ஒருவரிடம் தங்கதமிழ்செல்வன் பேசும்போது, தகாத வார்த்தைகளால் திட்டியதை அறிந்து கோபமடைந்தார். இந்த ஆடியோ பேச்சு சமூக வலைத்தளங்களிலும், ‘டிவி’ மற்றும் பத்திரிக்கைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன், மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன், மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளரான டேவிட் அண்ணாத்துரை ஆகியோர் மூலம், தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தினார். மேலும், யாரும் அவருடன் சென்று விடாத வகையில், சென்னைக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். தங்கதமிழ்செல்வன் அதிமுகவிற்கு போகப்போகிறார் என்ற தகவல் கிடைத்தாலும், ‘போனால் போகட்டும். அமமுகவின் தேனி மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவிகளுக்கு வேறு நபரை நியமிக்கப்போகிறோம்’ என பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தேனியில் கூட்டம் நடத்த அமமுக நிர்வாகிகளை அழைத்த தங்கதமிழ்செல்வன், அவர்களில் பெரும்பாலானோர் சென்னைக்கு சென்று விட்டதை அறிந்து கொந்தளித்தார். அந்த கோபத்தை வெளிப்படுத்திய அவர், தேனியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டலில் இருந்து கேரளாவிற்கு சென்று ஒரு ரகசிய இடத்தில் தங்கி விட்டதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, ‘‘தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேரப்போகிறாரா? திமுகவில் சேரப்போகிறாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான விஐபி தான் தங்கதமிழ்செல்வனை இயக்கி வருகிறார். தற்போது அவர் யார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தங்கதமிழ்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஓரிரு நாளில் அத்தனை குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும். தங்கதமிழ்செல்வன் வெகு விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பார்’’ என்றனர்.

ஓபிஎஸ் தடுக்கிறாரா?

தேனி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘அதிமுகவில் இருந்தபோது ஓபிஎஸ்சுக்கும், தங்கதமிழ்செல்வனுக்கும் ஏழாம் பொருத்தம். தற்போது விலகி இருவரும் வெவ்வேறு அணிகளில் இருந்த நிலையில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேருவதை ஓபிஎஸ் தடுத்து வருகிறார் என்பது உண்மை தான். ஆனால் அவரை சரிகட்டி கட்சியில் சேர்க்க முதல்வர் இபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர் அதிமுகவில் சேர வாய்ப்புகள் அதிகம் உள்ளது’’ என்றனர்.

Related Stories: