பருவமழை பெய்வதற்கு ஏற்றபடி தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பல் உத்தரவு

புதுடெல்லி: ‘மழையின் அளவு, அணைக்கான நீர்வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும்,’ என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மழுப்பலான உத்தரவை பிறப்பித்துள்ளது.  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம், திருச்சி மண்டல பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தமிழகம் சார்பில் கூறப்பட்டதாவது:தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறந்து விடாததால், இந்தாண்டு டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி நீர் திறக்க முடியாமல் போய் விட்டது. மேலும், மேட்டூர் அணையின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. ஜூன் மாத பங்கீடான 9.19 டிஎம்சி தண்ணீரை இந்த மாதத்திற்குள் காவிரியில் இருந்து கர்நாடகா திறந்து விட வேண்டும். ஆனால், ஆணைய உத்தரவை அம்மாநில அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. ஜூலை மாத பங்கீடு 31.24 டிஎம்சி நீரை, இந்த மாதம் போல் தாமதம் செய்யாமல் கெடுவிற்குள் திறந்து விட உத்தரவிட வேண்டும். மத்திய நீர்வளக் குழுமத்தில் இருந்து காவிரி நீர் தேக்கங்களை கண்காணிக்க தகுதி வாய்ந்த பொறியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்துதல் (ஒழுங்காற்று குழுவின்) தலைமையகம் பெங்களூருவில் இருப்பதால், அடுத்த கூட்டங்களை அங்கு நடத்த திட்டமிட வேண்டும் என்று கூறப்பட்டது.

Advertising
Advertising

கர்நாடகா பிரதிநிதிகள் கூறுகையில், ‘எங்கள் மாநிலத்தில் உட்பகுதியில்தான் மழை பெய்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. இந்த சூழலில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? இருப்பினும், கர்நாடகாவின் மழையின் அளவை பொருத்து தமிழகத்துக்கு நீர் திறக்க தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு உத்தரவாதம் முடியாது’ என கூறப்பட்டது. இதேபோல், புதுவை, கேரளா மாநில பிரதிநிதிகளும் நீர் பங்கீடு கேட்டனர்.பின்னர், ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் பிறப்பித்த உத்தரவில், ‘மழை, நீர்வரத்து ஆகியவற்றை பொருத்து, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து மாதத்துக்கான தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இதில், கர்நாடக அரசு தாமதம் செய்யக் கூடாது. குறிப்பாக, ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீர் என மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரையும் வழங்கிட வேண்டும்,’’ என தெரிவித்தார்.

‘மேகதாது பற்றி பேசவில்லை’

கூட்டத்துக்கு பிறகு மசூத் உசேன் அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலையில் தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட வேண்டிய நீரின் அளவு 40.43 டிஎம்சி.யாக இருந்தாலும், இது பருவமழை நல்ல நிலையில் இருக்கும் போது கொடுக்க வேண்டியவை. தற்போது, காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பருவமழை மிகவும் குறைவாக உள்ளது. வரும் காலத்தில் மழை அளவு நல்ல நிலையில் இருக்கும் என நம்புகிறேன். நீர்வரத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு நீர் கண்டிப்பாக திறக்கப்படும். மேகதாது அணை பிரச்னை பற்றி கூட்டத்தில்  எதுவும் விவாதிக்கப்படவில்லை,’’ என்றார்.

Related Stories: