எமர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம்: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு

மும்பை: எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் நேற்று கூறினார்.மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்னை குறித்து பேசிய முதல்வர் பட்நவிஸ், “எமர்ஜென்சியின்போது சிறைத் தண்டனை அனுபவித்தவர்களுக்கு பணத்தைக் காட்டிலும் ஓய்வூதியம் ஒரு கவுரவமாக இருக்கும். ஓய்வூதியம் பெற பலர் மறுத்துவிட்டனர். எனினும் செய்யாத தவறுக்காக கைது செய்யப்பட்டு வேலையை இழந்த சிலர் இன்னும் ஏழையாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் பெரிய உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் அஜித் பவார் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை அமைச்சர் மதன் எராவர், ஓய்வூதியம் கோரிய 3,267 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஓய்வூதியம் திட்டத்துக்காக ₹42 கோடி பட்ஜெட் இறுதி செய்யப்பட்டதாகவும், அதில் இருந்து ₹28 கோடி முதல் ₹29 கோடி வரை செலவிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் ஓய்வூதிய தொகையை அதிகரிக்கும் கோரிக்கையை முதல்வர் பட்நவிஸ் நிராகரித்து விட்டார். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார். எனினும் ஓய்வூதியத்துடன் ஒரு பாராட்டு பத்திரம் வழங்க முதல்வர் பட்நவிஸ் ஒப்புக் கொண்டார்.

Related Stories: