ஜனாதிபதி உரை மீது பிரதமர் மோடி பேச்சு ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும்: காங்கிரஸ் மீது சரமாரி தாக்கு

புதுடெல்லி: ‘‘ஊழலுக்கு இனியும் இடமில்லை. ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும்’’ என மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது, காந்தி குடும்பத்தை தவிர மற்ற யாருடைய பணியையும் காங்கிரஸ் மதித்ததில்லை என சரமாரியாக தாக்கிப் பேசினார். 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அனைத்துக் கட்சி எம்பிக்களும் பங்கேற்று பேசினர். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆளும் பாஜ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி மக்களவையில் நேற்று மாலை உரையாற்றினார். 2வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றும் முதல் உரை இது. அப்போது அவர் பேசியதாவது:ஜனாதிபதியின் உரை நாட்டு மக்களின் விருப்பங்களையும், நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக இருந்தது. நாட்டு மக்கள் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெறுவதைக் காட்டிலும் வெற்றியோ, தோல்வியோ பெரிதல்ல. 130 கோடி மக்களுக்கு சேவையாற்ற மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்ததையே திருப்தியாக கருதுகிறேன். மக்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை கொண்டு வர உழைப்போம். எனது அரசு ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. எங்களின் வளர்ச்சிப் பாதையில் இருந்து வழி தவறமாட்டோம். நவீன கட்டமைப்புகளுடன், அனைவருக்கும் அதிகாரம் வழங்குதலுடன் நாடு முன்னேற்றம் அடைவதே முக்கியம். சிலர் (காங்கிரஸ்) மிக உயரத்துக்கு சென்று விட்டார்கள். அதனால், களத்தின் உண்மை நிலையிலிருந்து தொடர்பில்லாமல் ஆகிவிட்டனர். உங்களைப்போல, உயரமான இடத்தை பிடிக்க நாங்கள் ஆசைப்படுவதில்லை. ஆணிவேருடன் உறுதியாக இணைந்திருக்கவே விரும்புகிறோம்.

மற்றவர்களின் பணியை காங்கிரஸ் மதித்ததில்லை. வாஜ்பாய் ஆட்சியின் சாதனைகளை காங்கிரஸ் பாராட்டியதில்லை. ஏன், அவர்கள் கட்சியை சேர்ந்த நரசிம்ம ராவ் ஆற்றிய பணிகளைப் பற்றி கூட பேசியதில்லை. இந்த விவாதத்தின் போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசின் சாதனைகளை கூட அவர்கள் குறிப்பிட்டது கிடையாது. ஆனால் நாங்கள் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்கிறோம்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சில நபர்கள் மட்டுமே பங்களிப்பு செய்ததாக சிலர் (காங்கிரஸ்) கருதுகிறார்கள். அந்த ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக தண்ணீர் பிரச்னை உருவெடுத்துள்ளது. அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

1975ல் எமர்ஜென்சியை அமல்படுத்திய நாள் இன்று. எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவே மிகப்பெரிய சிறையாக மாறியது. ஜனநாயகம் நசுக்கப்பட்டது. அப்படிப்பட்ட எமர்ஜென்சியை அமல்படுத்தியது யார்? அந்த கறுப்பு நாளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். குறிப்பிட்ட ஒரு நபரை சிறையில் அடைக்காமல், மற்றொரு நபரை மட்டும் ஏன் சிறையில் அடைக்கிறீர்கள் என அரசிடம் சிலர் கேட்கிறார்கள். வேண்டாதவர்களை சிறையில் தள்ள, இது எமர்ஜென்சி கால அரசு அல்ல. சிறையில் தள்ளுவதும், பெயில் தருவதும் நீதிமன்றத்தின் வேலை. இந்த நாட்டில் இனியும் ஊழலுக்கு இடமில்லை என்றார்.

பயிர் காப்பீடு கட்டாயமில்லை?

இயற்கை சீற்றங்களால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் கடந்த 2016ல் கொண்டு வரப்பட்டது. பயிர்க் கடன் பெற இக்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் கட்டாயம் சேர வேண்டும். இந்நிலையில், வேளாண் இணையமைச்சர் புருசோத்தம் ரூபாலா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ‘‘பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் விருப்பத்தின் பேரில் இணையலாம் என மாற்றம் செய்ய சில மாநில அரசுகளும், விவசாய சங்கங்களும் வலியுறுத்தி உள்ளன. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளும் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கருத்துகள் கேட்ட பிறகு, இத்திட்டம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கட்டாயமாகவும், கடன் பெறாதோருக்கு கட்டாயமில்லாததாகவும் மாற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: