வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ: அமமுகவில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கம்?

தேனி: அமமுகவில் டி.டி.வி.தினகரன்-தங்கதமிழ்செல்வன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து, அவரது உதவியாளரிடம் தங்கதமிழ்செல்வன் செல்போனில் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்று, வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் அதிமுகவில் சேர உள்ளார் என்றும், அதற்கு முன்னதாக அவர் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதனால் இரு கட்சிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் தினகரனுக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர், தேனி மாவட்ட செயலாளர் என அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக இருந்து வருகிறார். அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வனே சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் ஈடுபட்டு வந்தார். இவரை இழுக்க இபிஎஸ் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் மட்டுமே எனது அரசியல் ஆசான்கள். மற்றவர்களை ஏற்கவே மாட்டேன்’ என பிடிவாதம் காட்டி வந்தார். இருப்பினும் கட்சியை வழி நடத்துவதில் தினகரனுடன் இவருக்கு சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளை விமர்சித்தும் வந்துள்ளார். தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகனுக்கு எதிராக பெரும் ஆரவாரத்துடன் தங்கதமிழ்செல்வன் களம் இறக்கப்பட்டார். ஆனால், ஆண்டிபட்டியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவே இவர் விரும்பியதாகவும், இவரது விருப்பத்திற்கு மாறாக தேனி மக்களவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

தவிர இவருக்கு கட்சியினர் முழுமையாக வேலை செய்யவில்லை. டி.டி.வி.தினகரன் அவ்வப்போது வந்து பிரசாரம் செய்தாலும், முழுமையான ஈடுபாட்டினை காட்டவில்லை என்ற கோபம் தங்கதமிழ்செல்வனுக்கு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த தங்க.தமிழ்செல்வன், தனக்கு கட்சியினரும் ஓட்டளிக்கவில்லை. ஜாதியினரும் ஓட்டளிக்கவில்லை’ என கடுமையான வார்த்தைகளை பதிவு செய்தார். பின்னர் கடந்த 10 நாட்களுக்கு பின்னர் தங்கதமிழ்செல்வன் தேனியில் அமமுக நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தினார். அதில் வேலை செய்யாதவர்களை கடுமையாக சாடினார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தங்கதமிழ்செல்வன் அதிமுகவிற்கு செல்ல போகிறார் என்ற தகவல் பரவ தொடங்கியது. தங்கதமிழ்செல்வன் வந்தால் வரவேற்போம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விட்டார். இது அமமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமமுகவின் மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் மதுரையை சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து தேனியில் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் மகேந்திரன் உட்பட சிலர், தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் இனிமேல் யாரும் தங்கதமிழ்செல்வனுடன் போக வேண்டாம். நாம் நேரடியாக தினகரனை சந்திக்கலாம்’ என அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த தகவலறிந்த தங்கதமிழ்செல்வன் கொந்தளிக்க தொடங்கினார். தினகரனின் நேர்முக உதவியாளரை அலைபேசியில் அழைத்து, பொட்டைத்தனமான அரசியல் நடத்த வேண்டாம். நான் விஸ்வரூபம் எடுத்தால் என்னாகும் தெரியுமா? மதுரை மாவட்டத்தில் நான் கூட்டம் நடத்தவா?’ என சில அசிங்கமான வார்த்தைகளையும் பயன்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் பேச்சு வாட்ஸ்அப்பில் வைரலாக தொடங்கியது. நேற்று மாலை தேனியில் கூட்டம் நடத்த தங்கதமிழ்செல்வன் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஓரிருவர் மட்டுமே வந்திருந்தனர். இதனால் கூட்டத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார். நிருபர்கள் வழிமறித்து கேட்ட போது எந்த பதிலும் சொல்லவில்லை. பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, ‘சுவிட்ச்-ஆப்’ என பதில் வந்தது.

அமமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘அமமுகவை உடைக்க அதிமுக நடத்திய நாடகம் வெற்றிகரமான கட்டத்தை எட்டி உள்ளது. தங்கதமிழ்செல்வன் விஷயத்தில் என்ன செய்யலாம் என டிடிவி.தினகரன் சென்னையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்’’ என்று தெரிவித்தனர். கட்சி மாறும் முன்னரே தங்கதமிழ்செல்வனை நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அமமுக தரப்பில் இருந்து இந்த ஆடியோ பதிவு வேண்டுமென்றே கசிய விடப்பட்டதாக கூறப்படுகிறது. அமமுகவில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ்சுக்கு ‘செக்’?

ஒரே மாவட்டத்தை சேர்ந்த தங்கதமிழ்செல்வனுக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ரகசியம். தங்கதமிழ்செல்வனை அதிமுகவில் சேர்ப்பதன் மூலம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்த மாவட்டத்தில் குடைச்சலை கொடுக்க, முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் அதிமுகவில் தங்கதமிழ்செல்வன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று தெரிகிறது.

Related Stories: