ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 4 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2017 செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசாணையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நவம்பர் 22ம் தேதிதான் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4 முறையாக கால அவகாசம் நீட்டிப்பு

இதனால், ஆணையத்திற்கு மேலும், 6 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு சசிகலா தரப்பு தாங்களும் வாக்குமூலம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும், ஆணையம் சார்பில் பல சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. இதனால், மீண்டும் 4 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆணையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி மேலும் 4 மாத காலஅவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4வது முறையாக  4 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

இந்நிலையில், ஆணையம் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 150 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. சசிகலா தரப்பில் இதுவரை வாக்குமூலம் அளித்த 13 பேரை தவிர்த்து மற்றவர்களிடம் குறுக்கு விசாரணை முடிந்துள்ளது. தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே ஆணையம், அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது. தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. 50 சதவீதம் அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், சசிகலா தரப்பில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலரை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், ஆணையம் சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளது. எனவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 5வது முறையாக அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: