காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்

டெல்லி: குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிடாத நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் டெல்லியில்தொடங்கியது. இதில் தமிழகம் உட்பட நான்கு மாநில பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரிநீரை பகிர்ந்து கொள்ளும் விதமாக நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4 மாநிலங்களும் மேற்கண்ட இரு அமைப்புகளுக்கான தங்களது தரப்பின் பிரதிநிதி உறுப்பினர்களை நியமித்து உள்ளன.

இதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை மூன்று முறை கூடி நடந்துள்ளது. இதில் கடந்த மாதம் 28ம் தேதி கூடிய அந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரை உடனடியாக திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.  இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் செயல் என தமிழக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் காவிரியில் இருந்து 4.5டி.எம்.சி தண்ணீர் வந்து இருக்க வேண்டும். ஆனால் ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தின் போது காவிரியில் இருந்து ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி நீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் பருவமழை பெய்தால் தான் காவிரியில் இருந்து நீர் திறக்க முடியும். இல்லையேல் கண்டிப்பாக கொடுக்க வாய்ப்பில்லை என கர்நாடகா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவாதிட்டது. இதனால் தமிழகத்திற்கு உண்டான நீர் பங்கீடு கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் இருந்து கடந்த 13ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்சனை குறித்து ஆலோசிக்கும் விதமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 25ம் தேதி அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. அதனால் நான்கு மாநிலங்களின் ஆணைய பிரதிநிதிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’’ என அதில் குறிப்பிடப்பட்டது. அதன்படி இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையி்ல் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

தமிழகம் வலியுறுத்தல்;

9.19 டி.எம்.சி. நீரை உடனே கர்நாடகம் விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் விடுவிக்கப்படாததால் பாசனத்துக்காக ஜுன் 12-ல் நீர் திறக்க முடியவில்லை. ஜுலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரையும் கர்நாடகம் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு கண்டனம்;

காவிரி மேலாண்மை ஆணைய 4-வது கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறும் வகையில் மேகதாது அணை திட்டம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. மேகதாது திட்டத்தை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அது பற்றி விவாதிக்க கூடாது. தமிழ்நாடு மற்றும் பிற காவிரிப்படுகை மாநிலத்தின் ஒப்புதல் இன்றி காவிரியில் கர்நாடகம் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: