×

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. கடந்த 21ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5வது முறையாக கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விதிமுறை மீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்கி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கடந்த 2007 ஜூலை முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சார்பில் சிஎம்டிஏ, பொதுப்பணித்துறை  உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. அதன்படி, கடந்த ஜூலை 2007க்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய கடந்த 22.6.2017ல் அரசாணை வெளியிட்டது.அதில், 01.07.2007க்கு முன் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட சட்டவிரோத மற்றும் விதிமீறல் கட்டிடங்களை உரிய அபராதம் மற்றும் கட்டணத்துடன் வரன்முறை செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

 21ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது

தொடர்ந்து வரன்முறைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் திட்டம் கடந்த 2017 ஜூன் 22ம் தேதி முதல் தொடங்கியது. கட்டிட வரன்முறை செய்ய கூடுதல் சலுகைகள்  வழங்கப்பட்டாலும், வரன்முறை மற்றும் உட்கட்டமைப்பு கட்டணங்கள் அதிகமாக இருந்ததால் பெரும்பாலான கட்டிட உரிமையாளர்கள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த திட்டம் அமல்படுத்தி 24 மாதங்கள் ஆன நிலையில் இதுவரையில் குறைவான பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதியுடன் கட்டிட வரன்முறை செய்ய விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்தது.

திட்டத்திற்கு 6 மாத  கால அவகாசம் நீட்டிப்பு

இந்த நிலையில், மேலும் கட்டிடங்களை வரன்முறை செய்ய கால அவகாசம் வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்புறத்துறை வளர்ச்சி துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் டிடிசிபி, சிஎம்டிஏ  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்டிடங்களை வரன்முறைபடுத்த மேலும் கட்டிட உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இத்திட்டத்திற்கு 6 மாத  கால அவகாசம் வழங்கி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட 24 மாத கால அவகாசத்தை 30 மாதங்களாக நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டது.


Tags : Government of Tamil Nadu ,violation , Violation, time limit, extension, Krishnan, Public Works Department
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...