×

குளறுபடியால் கம்ப்யூட்டர் தேர்வு எழுதாத கணினி ஆசிரியர்களுக்கு ஜூன் 27ம் தேதி ஆசிரியர் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: கணினி ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் நடந்த குளறுபடிகள் காரணமாக நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்ட மையங்களில் 27ம் தேதி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் 119 மையங்களில் கணினி ஆசிரியர் தேர்வுகள் நடந்தன. அதில் 3 மையங்களில் தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வு நாளன்று எதிர்பாராத விதமாக சரிசெய்ய இயலாத அளவில், கணினித் தொழில் நுட்பக் கோளாறு ஏற்படும் நிலையில், அத்தேர்வு மையத்துக்கு மட்டும் தேர்வை ரத்து செய்து உடனடியாக மறு தேர்வு நடத்துவதற்கு வெளியிடுவது பொதுவாகவே வழக்கத்தில் உள்ளது. கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி வழித் தேர்வு மையத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தேர்வில் பங்கு கொள்ள இயலாத தேர்வர்கள், மற்றும் தேர்வில் கலந்து கொண்டு முழுமையாக நிறைவு செய்யாத  தேர்வர்களுக்கு மட்டும் 27ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் தேர்வு முடிந்த பிறகுதான் தேர்வு மையத்தில் செல்போன் அனுமதிக்கப்பட்டது. அது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்படும். முறைகேடுகள் ஏதாவது நடந்திருந்தால் அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, தேர்வு மையத்துக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதித்த கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று தெரிந்தும் தேர்வு எழுத வந்தவர்கள் பலர் செல்போனை உள்ளே எடுத்து சென்றுள்ளனர். அதனால் அவர்களில் பலருக்கு தேர்வு எழுத தடை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எந்த மாதிரியான நடவடிக்கையை ஆசிரியர் தேர்வுவாரியம் எடுக்கப்போகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் நடவடிக்கை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Tags : Teachers , unwritten, computer, teachers,Examination Board
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...