×

தண்ணீர் பஞ்சத்தை போக்க இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் சிறைகளை நிரப்பும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் : சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “தண்ணீர்  பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா  சிறைச்சாலைகளையும் நிரப்பக்கூடிய அளவிற்கு ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்று சென்னையில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை  விடுத்துள்ளார். சென்னையில் தலைவிரித்தாடும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்கள் எஸ்.மதன்மோகன், ஏஆர்பிஎம்.காமராஜ் ஆகியோர் வரவேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் வந்திருந்து தமிழக அரசுக்கு எதிராக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  குடம் இங்கே குடிநீர் எங்கே என்ற நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய குடிநீர் பஞ்சத்தை உடனடியாக அரசு போக்கிட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைவர் கலைஞர் பராசக்தி திரைப்படத்தில் வரக்கூடிய ஒரு காட்சியை அவர் இங்கே சுட்டிக் காட்டி இருக்கின்றார். நானும் அதே பராசக்தி திரைப்படத்தில் முதல் காட்சியை குறிப்பிட விரும்புகின்றேன். கதாநாயகன் தமிழ்நாட்டில் நுழைந்தவுடன் “ஐயா பிச்சை போடுங்கள்” என்கின்ற ஒரு குரல் தான் கேட்கும். உடனே அந்த கதாநாயகன் தமிழ்நாட்டின் வரவேற்பு குரலே மிக சிறப்பாக இருக்கின்றது என்று சொல்வான். அதுபோல் இன்றைக்கு தமிழகத்தின் குரலாக “தண்ணீர் எங்கே? தண்ணீர் எங்கே?” என்று கேட்கக்கூடிய குரலாக மாறி, இந்த நிலை உருவாகியிருக்கின்றது.  கோட்டையில் முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு இக் குரல் கேட்கவில்லை. கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அமைச்சர்கள் யாகம் நடத்துவது அவர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான். 28ம் தேதி சட்டமன்றம் கூடப் போகின்றது. நாங்கள் ஒரு கடிதம் கொடுத்திருக்கின்றோம். சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று. அந்தக் கடிதத்திற்கு எந்த மாதிரி ஒரு சூழ்நிலை அமையப் போகின்றது என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் சபாநாயகரை நீக்குவதை விட முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியைத் தான் முதலில் நீக்க வேண்டும். அது விரைவில் வரத்தான் போகின்றது. சட்டமன்றம் கூட போகின்றது, அடுத்த தேர்தல் வந்துதான் இந்த ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, தேர்தல் வராமலேயே இந்த ஆட்சி மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நடக்கத்தான் போகின்றது. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  

 வேண்டிய அளவிற்கு தண்ணீர் இருந்தால் தாய்மார்கள் சாலைக்கு வந்து போராடுவார்களா? இந்த சராசரி அறிவு கூட முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்பதுதான் நமக்கு வேதனையாக இருக்கின்றது. வேலுமணியை பொறுத்தவரையில் அவருடைய உறவினர்கள், அவருக்கு வேண்டிய நண்பர்கள், என எல்லோரையும் பினாமியாக வைத்துக்கொண்டு அவர்களுக்குத்தான் ஒப்பந்தங்களை கான்ட்ராக்ட்களை டெண்டர்களை விட்டு கொண்டிருக்கிறாரே தவிர வேறு எதுவும் இந்த ஆட்சி செய்யவில்லை.கேரளாவில் இருந்து தண்ணீர் வந்தால் லஞ்சம் வாங்க முடியாது, அதில் கொள்ளையடிக்க முடியாது, ஆனால் ஜோலார்பேட்டையில் இருந்து வரக்கூடிய தண்ணீரை வைத்து நாம் கொள்ளையடிக்கலாம். இந்த சூட்சமத்தைத் தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  மிக விரைவில் இதற்கு ஒரு முடிவு வரவில்லை என்றால் எல்லா சிறைச்சாலைகளையும் நிரப்பக்கூடிய அளவிற்கு ஒரு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தயாநிதிமாறன்  எம்பி பேசுகையில், ‘‘ திமுக ஆட்சியில் ஆயிரம் ேகாடியில் கடல் நீரை  குடிநீராக்கும் திட்டம்  கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கடல் நீரை  குடிநீராக்கும் இரண்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை  அதிமுக அரசு விரிவாக்கம் செய்திருந்தால் வீட்டிலிருந்து நாம் தண்ணீர்  பிடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் விரிவாக்கம் செய்யாததால் தான்  மக்கள் தண்ணீருக்காக சாலையில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற  வேண்டும். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வந்தால் மட்டுமே இந்த  பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்  வருவார்’’ என்றார்.ஆர்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, எம்எல்ஏக்கள் கு.க.செல்வம், மோகன், ஆர்.டி.சேகர், முன்னாள் அமைச்சர் ரகுமான் கான், கே.கே.நகர் தனசேகரன், பகுதி செயலாளர் மயிலை த.வேலு, இ.கருணாநிதி, தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

‘வேலுமணி அல்ல; ஊழல் மணி’
ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அமைச்சர் வேலுமணியை அப்படி அழைக்கக்கூடாது. ஊழல்  மணி என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய துறைக்கு என்ன பெயர் என்று  கேட்டீர்களென்றால் உள்ளாட்சித்துறை, அதுவும் உள்ளாட்சித்துறை அல்ல ஊழல்  ஆட்சித்துறை. தண்ணீர் பஞ்சம் என்பது வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். குடிக்க  தண்ணீர் பஞ்சம் இல்லை. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை என்று வேலுமணி சொல்கிறார். ஆனால், அதே நேரத்தில் ஹோட்டல்கள் எல்லாவற்றையும் மூடாதீர்கள் என்கிறார். பள்ளிக்கூடங்களை எல்லாம் குடிநீர்  இல்லை என்பதற்காக மூடக்கூடாது என்ற அந்த உத்தரவையும் போட்டுக்  கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Tags : fight ,Tamil Nadu ,MK Stalin ,Chennai , Unless action , taken , famine, Tamil Nadu , MK Stalin
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...