‘எஸ்இடிசி’ பஸ்களில் விநியோகம் நிறுத்தம் வாட்டர் பாட்டில்கள் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு: கூடுதல் விலைக்கு தண்ணீர் வாங்கும் அவலம்

சென்னை: அரசு எஸ்இடிசி பஸ்களில் பயணிப்போருக்கு வாட்டர் பாட்டில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீண்ட தூரம் செல்வோர், ஆங்காங்குள்ள ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய  அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 8 இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக தினந்தோறும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு  வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதை தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதுதவிர அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) சார்பில், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி, சிலிப்பர் பஸ்கள் என 1000க்கும்  மேற்பட்ட பஸ்கள், 250க்கும் அதிகமான வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் எஸ்இடிசி பஸ்களில் பயணிப்போரின் வசதிக்காக ‘வாட்டர் பாட்டில்’ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சீட்டில் உட்காந்திருக்கும் பயணிகளிடத்தில் வந்து நடத்துனர்கள் பாட்டிலை வழங்கி வந்தனர். இதனால், அரசு  பஸ்களில் பயணிக்கும் பயணி, தனக்கு எப்போது குடிநீர் தேவைப்பட்டாலும் நடத்துனரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ₹10க்கு தண்ணீர் சீட்டிலேயே கிடைப்பது மக்களிடத்தில் வரவேற்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகவுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் தண்ணீர் பாட்டில் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் நீண்ட தூரம் செல்ேவார்  கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் வழியில் நிறுத்தப்படும் ஓய்வு இடங்களில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் பாட்டில்களை, ₹25 முதல் 30 வரை செலுத்தி வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக பஸ்  ஸ்டாண்டுகளில் உள்ள அம்மா வாட்டர் பாட்டில் ஸ்டால்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: அரசு பஸ்சில் நேற்று (நேற்று முன்தினம்) பயணித்தோம். அப்போது வழக்கம்ேபால் குடிநீர் நடத்துனரிடம் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என உள்ளே சென்றுவிட்டோம். பஸ் புறப்பட்ட பிறகு,  நடத்துனர் சீட்டின் அருகே வந்து டிக்கெட் வாங்கும்படி கூறினார். அப்போது அவரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டோம். அதற்கு இல்லை எனக்கூறிவிட்டார். வெயில் காலம் என்பதால், நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தோம். சில மணிநேர இடைவேளிக்கு பிறகு, பஸ் ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது. அங்குள்ள  கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்க கேட்டபோது, ₹25 முதல் 30 வரை விலை கூறப்பட்டது.

வேறு வழியில்லாமல் அதை வாங்கினோம். மேலும் அவை தரமானதாகவும் இல்லை. இதனால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வழக்கம்ேபால் தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் பாதிப்பில்லாமல் பயணம் செய்வார்கள் என்றனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த, 2013ம் ஆண்டு முதல் குறைவான விலையில் குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. தினசரி 1.30 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகின்றன. அனைத்து  பஸ்களிலும் வழக்கம்போல் குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. பயணிகள் புகார் அளிக்கும் பட்சத்தில், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: